புதுடில்லி,'கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட, ௧௭ மடங்கு வரை அதிகமாக இருக்கும்' என, பனாரஸ் ஹிந்து பல்கலை ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, நம் நாட்டில், ௪.௫௦ கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலை இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.
![]()
|
சர்வதேச நோய் தொற்று இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
நம் நாட்டில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டவர்கள் மட்டுமே பரிசோதனைகளை செய்தனர்.
இதன்படியே, அரசின் புள்ளி விபரங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ௨௦௨௦ செப்., - டிச., மாதங்களில் நாடு முழுதும் பல்வேறு நகரங்கள் உள்ளிட்ட இடங்களில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.
இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டதில்லை என்று கூறியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.
அறிகுறிகள் இல்லாமல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோர் குறித்த புள்ளி விபரங்கள், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களில் இடம்பெறவில்லை. இதன்படி பார்த்தால், அரசின் புள்ளி விபரங்களில் கூறப்பட்டுள்ளதைவிட, உண்மையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ௧௭ மடங்கு அதிகமாக இருக்கும்.
பல்வேறு கணித அடிப்படையில் பார்க்கும்போது, உண்மையில் நம் நாட்டில் ௫௮ - ௯௮ கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும். அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ௨௬ - ௩௫ வயதுக்குட்பட்டோர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement