சென்னை :இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் தரப்புபேச்சாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. பழனிசாமி தரப்பு கொடுத்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை ஏற்றதேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் தரப்பு பட்டியலை நிராகரித்தது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்பில், முன்னாள்எம்.எல்.ஏ., தென்னரசு; பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பு தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தென்னரசு, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆனார். அவருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
நிராகரிப்பு
ஒரு வழியாக வேட்பாளர், சின்னம் தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வந்த நிலையில், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக, பன்னீர்செல்வம் அணியினர் அறிவித்தனர்.
இதற்கிடையில், இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய, பழனிசாமி தரப்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள்; பன்னீர்செல்வம் தரப்பில், 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல், தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, இடைத்தேர்தல் தொடர்பான விஷயங்களுக்கு, அ.தி.மு.க., அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறுவதை ஏற்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி, பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேர் பட்டியலை, தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது; பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்ட பட்டியல் நிராகரிக்கப்பட்டது.
இடம் பெறவில்லை
நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்திற்கு செல்லும்போது, அவர்களுக்கான போக்குவரத்து செலவு, வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது.
தற்போது தேர்தல் ஆணையம், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை நிராகரித்ததால், பன்னீர்செல்வம் தரப்பு பேச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பழனிசாமி தரப்பு அளித்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, விஸ்வ நாதன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடிகர், நடிகையர் யாரும் இடம் பெறவில்லை.
இடைத்தேர்தலில் வேட்பாளரை வாபஸ் பெற்று, 'இரட்டை இலை' சின்னம் கிடைக்க உதவிய போதிலும், பன்னீர்செல்வம் தரப்பினரை, பழனிசாமி தரப்பினர் கண்டுகொள்வதில்லை; 'தேர்தல் பிரசாரத்துக்கும் அழைப்பதில்லை' என்ற முடிவில் உள்ளனர்.எனவே, பன்னீர்செல்வம் பிரசாரத்துக்கு செல்ல வாய்ப்பில்லை. அவரது ஆதரவாளர்களும், பழனிசாமி அழைத்தால் தேர்தல் பணியாற்றுவது, இல்லையெனில் அமைதி காப்பது என்ற முடிவில் உள்ளனர்.