'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பா.ஜ.,வை கண்டுகொள்ள வேண்டாம்' என, அ.தி.மு.க.,வினருக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.ஒற்றை தலைமையை ஏற்காமல், பன்னீர்செல்வம் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், வரும் 27ல் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
கூட்டணி
இதில் தனி சின்னத்தில் போட்டியிட்டு, தன் செல்வாக்கை நிரூபித்து, அ.தி.மு.க.,வை தன் வசப்படுத்தி விடலாம் என, பழனிசாமி கணக்கு போட்டார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு, பா.ஜ., மேலிட வற்புறுத்தலால் பன்னீர்செல்வம் தன் வேட்பாளரை 'வாபஸ்' பெற்றார்.
இதனால், பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவுக்கு, இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும், பா.ஜ., கூறியதை ஏற்று, தன் வேட்பாளரை 'வாபஸ்' பெற்றுள்ளார்.இதற்கெல்லாம் காரணம், பா.ஜ., என்பதை அறிந்த பழனிசாமி கடும் கோபத்தில் இருக்கிறார்.
'பா.ஜ.,வினரை யாரும் கண்டுகொள்ள வேண்டும். அவர்களாகவே வந்து தேர்தல் வேலை பார்த்தால் பார்க்கட்டும். மற்றபடி யாரையும் அழைக்க வேண்டாம். போஸ்டரில் பிரதமர் படத்தை மட்டும் பெரிதாக போடுங்கள். 'கூட்டணி கட்சி தலைவர் ஜான் பாண்டியனுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு கொடுத்தால் போதும்' என, தேர்தல் பொறுப்பாளர்களிடம், பழனிசாமி கண்டிப்புடன் கூறியுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு இருந்தும், 2004 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா விரும்பவில்லை.தற்போது, உட்கட்சி பிரச்னைகளாலும், மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருப்பதாலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஈரோடு கிழக்கு தொகுதியில், சிறுபான்மையினர் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. எனவே தான், பா.ஜ.,வினரை பெரிதாக கண்டுகொள்ள வேண்டும் என, பழனிசாமி கூறியுள்ளார்.
கர்நாடக தேர்தல்
கட்சியில், 98 சதவீத நிர்வாகிகளின் ஆதரவை கொண்டுள்ள பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை ஒன்றாக கருதுகிறார். தனிப்பட்ட சந்திப்பில் ஒன்றும், பொதுவெளியில் ஒன்றும் சொல்கிறார். இதனால், பா.ஜ., மீது கடும் அதிருப்தியில் பழனிசாமி இருக்கிறார். இதனால், பிரதமர் மோடி தவிர, மற்றவர்களிடம் எதுவும் பேச வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.இதனால், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஓரிரு நாட்கள் பிரசாரம் செய்துவிட்டு, கர்நாடகா சட்டசபை தேர்தல் பணிகளுக்கு சென்று விடுவார் என்கின்றனர், பா.ஜ.,வினர்.