சென்னை: ''பெண்ணுக்கு திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல பொருளாதார சுதந்திரமும் முக்கியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், ஹிந்து கல்லுாரியில் 'புதுமைப் பெண்' திட்டத்தின் இரண்டாம் கட்டம் துவக்க விழா நடந்தது.
69.44 கோடி ரூபாய்
திட்டத்தை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இரண்டாயிரம் ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு இனம், சுயமரியாதை உணர்வோடு போராடி மேலே வந்த வரலாறு. அது தான் தமிழகத்தின் வரலாறு; நம்முடைய வரலாறு.
மகளிர் உரிமைக்காக, நாம் எவ்வளவோ செய்திருக்கிறோம்; எவ்வளவோ போராடி இருக்கிறோம். அது மட்டுமல்ல. மகளிர் சொந்தக் காலில் நிற்க வேண்டும்.
யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சுயமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான், மகளிர் சுய உதவிக் குழு.
புதுமைப் பெண் திட்டம், கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. பள்ளிக் கல்வி முடித்த அரசுப் பள்ளி மாணவியர், கல்லுாரி செல்லாமல் நின்று விடக் கூடாது என்பதற்காக, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் பெயரால், உயர் கல்வி உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த திட்டத்தில், 1.16 லட்சம் மாணவியர் பயன் அடைந்துள்ளனர். இதற்காக கடந்த ஐந்து மாதங்களில், 69.44 கோடி ரூபாய், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் பொருளாதாரச் சூழலால், படிப்பை பாதியில் நிறுத்தும் நிலையில் இருந்த, 12 ஆயிரம் மாணவியர், இத்தொகை கிடைத்த காரணத்தால், இன்றைக்கு படிப்பை தொடர்கின்றனர்; இது தான் வெற்றி.
தற்போது, இரண்டாம் கட்டமாக திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன். அனைவரும் நன்றாக படியுங்கள்; உயர் கல்வி படியுங்கள்; ஏதேனும் ஒரு பாடத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள்; தகுதியான வேலைகளில் சேருங்கள்.
பொருளாதார சுதந்திரம்
பெண்ணுக்கு திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல பொருளாதார சுதந்திரமும் முக்கியம்.தகுதியுள்ள வேலை வாய்ப்புகளை, நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
படிக்கும் காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். கல்லுாரி காலத்தை, படிப்புக்கும் உயர்வுக்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை வளர்த்தெடுக்கவே, இந்த திட்டத்தை துவக்கி உள்ளோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், நாசர், திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்றனர்.