புதுடில்லி பிரதமர் நரேந்திர மோடி குறித்து லோக்சபாவில் தரக்குறைவான குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, லோக்சபாவில் நேற்று கோரிக்கை விடுத்தார். ''ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆட்சேபத்துக்குரியவை, அடிப்படை ஆதாரமற்றவை,'' என அவர் சபையில் கொந்தளித்தார்.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31ல் துவங்கி தொடர்ந்து நடந்த வருகிறது.
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி குறித்து, 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பார்லி.,யில் எதிர்க்கட்சியினர் கடந்த சில தினங்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
கொந்தளிப்பு
லோக்சபா நேற்று முன்தினம் கூடியபோது, காங்., - எம்.பி., ராகுல், அதானி விவகாரம் குறித்து பேசினார். அப்போது, ''மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டுக்கு பின் தான், கவுதம் அதானியின் நிறுவனம் அபார வளர்ச்சி அடைந்தது. உலக பணக்காரர்கள் பட்டியலில், 609வது இடத்தில் இருந்தவர் இரண்டாவது இடத்துக்கு உயர்ந்தார். இதற்கு பிரதமர் மோடியின் தயவு தான் காரணம்,'' என பேசினார்.
இது, சபையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுல் அபாண்டமான, கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், அதற்கு தகுந்த ஆதாரங்களை அவரால் அளிக்க முடியுமா என்றும் சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி எழுப்பினார்.
குற்றச்சாட்டு
இந்நிலையில், லோக்சபா நேற்று கூடியதும், பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியதாவது:
பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று முன்தினம் சபையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஆட்சேபனைக்குரியவை.
பார்லிமென்ட் விதிகளின்படி, சபையில் ஒருவர் மீது மற்றொரு உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டுமெனில் முன்கூட்டியே, 'நோட்டீஸ்' அளிக்க வேண்டும்.
இவை எதையும் பின்பற்றாமல், ராகுல் தன் இஷ்டத்துக்கு பேசிய பேச்சுக்களை சபைக்குறிப்பில் இருந்து நீக்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதில், 'ராகுலின் கண்ணியமற்ற தரக்குறைவான பேச்சு, சபையின் மாண்புக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது. சபையின் சிறப்புரிமையை மீறியதுடன், சபையை அவமதித்த ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளார்.
திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது, பல்வேறு தரக்குறைவான கருத்துக்களை கூறியதாக பா.ஜ., உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சபையில் பதற்றம் நிலவியது. இது குறித்து மஹுவா மொய்த்ராவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:பார்லிமென்டில் கடுமையான, தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. பா.ஜ., உறுப்பினர்களும், அமைச்சர்களும் அப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். 'ஒரு பெண்ணாக இருந்து, இப்படிப்பட்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தலாமா' என, பா.ஜ., உறுப்பினர்கள் கேட்பது தான் வேடிக்கையாக உள்ளது.என்னை நோக்கி வீசப்படும் தரக்குறைவான வார்த்தைகளுக்கு பதிலடி கொடுக்க, நான் ஆணாக இருக்க வேண்டியது அவசியமா? இதன் வாயிலாக பா.ஜ.,வினரின் ஆணாதிக்க மனோபாவம் வெளிப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.