மதுரை -மதுரை மீனாட்சி கோயிலை சுற்றியுள்ள மாசி வீதிகளில் டூவீலர், கார்களுக்கு 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கக்கூடாது என மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம் கூறியதாவது:
ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரி, தொழில்வரி, குடிநீர், பாதாள சாக்கடை, சொத்துவரி, சாலைவரி, மின்கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வணிகர்கள் தொழில் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பொருள் வாங்க வருவோர் 'பார்க்கிங்' கட்டணம் செலுத்த வேண்டுமெனில் வேறு பகுதிகளில் பொருள் வாங்க சென்றுவிடுவர். கடை உரிமையாளர்களும், பணியாளர்களும் மாதந்தோறும் ஒரு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்து தரும் வணிகர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மாநகராட்சி கைவிட வேண்டும், என்றனர்.