புதுடில்லி :கடந்த 2022ல், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், அவர் கூறியிருப்பதாவது:
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில், 4.90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, இந்தியாவின் ஏற்றுமதியில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது.
![]()
|
அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, சீனா , சிங்கப்பூர், வங்கதேசம் ஆகிய இடங்களுக்கு அதிகளவிலான ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தற்போது உள்ள வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மார்ச் 31 வரை நீட்டிப்பது என்றும், ஏற்றுமதிக்கு முந்தைய, பிந்தைய கடன் மீதான வட்டி மானியத் திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பது என்றும் மத்திய அரசு முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.