வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க 'டி-20' லீக் போட்டியில், அரையிறுதி ஆட்டத்தில் பெர்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்திய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது.
தென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., பாணியிலான எஸ்.ஏ., 'டி-20' தொடர் நடக்கிறது. சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதன் முதல் அரையிறுதி போட்டியில், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - பெர்ல் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின.
இதில் டாஸ் வென்ற பெர்ல் ராயல்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிக்கு சால்ட்(22) சுமாரான துவக்கம் தந்தார். குசல் மெண்டிஸ்(7), தெனிஸ் டி புரூய்ன்(9) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ரூசோ, 41 பந்தில் 56 ரன்(3 சிக்சர், 5 பவுண்டரி) விளாசினார். இங்ரம்(10), நீஷம்(4) உள்ளிட்டோர் ஏமாற்றினர். பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது. பெர்ல் ராயல்ஸ் சார்பில் புலுக்வாயோ 3 விக்கெட், ஷம்ஸி 2 விக்கெட் வீழ்த்தினர்.
![]()
|
சற்று கடின இலக்கை விரட்டிய பெர்ல் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் மில்லர்(31), ஸ்டிர்லிங்(21) நம்பிக்கை தந்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற, 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் சார்பில் அடில் ரஷித், நீஷம், நார்ஜே, போஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ரூசோ தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது.
இன்று(பிப்.,9) நடக்கும் மற்றொரு அரையிறுதியில், டுபிளசி தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (ஜோகனஸ்பர்க்) அணி, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடன் மோதுகிறது.