வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஆர்.ராமானுஜதாசன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: அண்ணாதுரை மறைந்த நேரம். அப்போது, அதுதான் முதல் பெரிய தலைவரின் மறைவு; யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அண்ணாதுரைக்கு நினைவுச் சின்னம் வைக்கும்படி பலரும் யோசனை கூறினர்.
'ரஷ்யாவில், 'லெனின் கிரேட்' என்று உள்ளதை போல, சென்னை மாநகரத்துக்கு, 'அண்ணா கிரேட்' என்று பெயர் வைக்கலாம்' என்றார், ஒருவர்; மற்றொருவரோ, 'அண்ணாதுரைக்கு, தமிழகம் முழுதும் 1,000 சிலைகள் வைக்க வேண்டும்' என்றார்.
ஆனால், தான் உயிருடன் இருக்கும் போதே, தனக்கு சென்னையில் சிலை வைத்துக் கொண்டவர் அண்ணாதுரை. இப்போது உள்ள அண்ணாநகர், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த, பெரிய உலக வர்த்தக கண்காட்சியின் போது கட்டமைக்கப்பட்டது. வெறும் குப்பைமேடு பெரிய இடமாக மாறியது.
ஆனாலும், காங்கிரஸ் கட்சியினருக்கு, தங்கள் தலைவர்கள் பெயரை வைக்கத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, தி.மு.க., பட்டா போட்டுக் கொண்டது; தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், எல்லா இடங்களிலும் அண்ணாதுரை நாமம் தான்.
![]()
|
அண்ணாசாலை, அண்ணா சிலை, அண்ணா தியேட்டர், அண்ணா மேம்பாலம், அண்ணா பல்கலை கழகம் என, எல்லாம் அண்ணாதுரை பெயர் தான். பொதுவாகவே திராவிட ஆட்சியில் பெயர் வைத்துக் கொள்வது சடங்கு மாதிரியாகி விட்டது. இப்போது ஒருவர், 'மெரினாவை 'கருணாநிதி கடற்கரை' என, பெயர் மாற்ற வேண்டும்' என்கிறார். இது, எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை. கருணாநிதிக்கும், கடற்கரைக்கும் என்ன சம்பந்தம்?
இப்படியே போனால், தமிழ்ப்படம் என்ற ஒரு படத்தில், கதாநாயகன் எல்லா இடங்களிலும் தன் பெயரை சூட்டிக் கொள்வான். அதுபோல, 'கருணாநிதி பஸ் ஸ்டாண்டு, கருணாநிதி ஆஸ்பத்திரி, கருணாநிதி சாலை, கருணாநிதி மின்சார வாரியம், கருணாநிதி மெட்ரோ ரயில், கருணாநிதி பி.டபிள்யு.டி.,' என, பெயர் வைக்க வேண்டியது தான். இவர்களை யார் கேள்வி கேட்க முடியும்?