வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விளம்பர மாடல் அழகிக்கு தவறாக முடி திருத்தம் செய்ததற்காக புதுடில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் சலுானுக்கு, 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. மீண்டும் விசாரிக்கும்படி தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளம்பர படத்தில் நடிக்கவிருந்த மாடல் அழகி ஆஷானா ராய், 2018 ஏப்.,12ல் புதுடில்லியில் உள்ள ஐ.டி.சி., மவுரியா ஹோட்டலின் சலுானில், 'ஹேர் கட்டிங்' செய்ய சென்றார். ஆனால், தான் கூறியபடி செய்யாமல் அதிக அளவு முடியை வெட்டிவிட்டதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனால், தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், கடுமையான மன உளைச்சல் ஏற்பட்ட தாகவும் புகாரில் அவர் கூறியிருந்தார். இதை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம், ஆஷானா ராய்க்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, 2021 செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: புகார் கொடுத்துள்ள ஆஷானா ராய், அந்த நேரத்தில் எந்தெந்த விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். அல்லது எந்த விளம்பர படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்திருந்தார்.
![]()
|
அந்த நேரத்தில் அவருடைய வருமானம் எவ்வளவு என்பது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. சலுான் சார்பில் சேவை குறைபாடு உள்ளதா என்பது குறித்த குறைதீர் மன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்த இழப்பீடு கோருவதற்கு அடிப்படை தேவை.
அதனால், இந்த வழக்கை, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம்மீண்டும் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதனால், குறைதீர் மன்றத்தின் முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.