கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூவாற்றுப்புழாவைச் சேர்ந்தவர் ஜலஜா, 60. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது, 17 வயது சிறுமி வீட்டுக்குள் நுழைந்து, அவரிடம் நகைளை கழற்றி தரும்படி கேட்டார். ஜலஜா மறுத்ததால் அவரது முகத்தில் மிளகாய் பொடியை துாவி, சுத்தியலால் பின் தலையில் தாக்கினார்; செயின் மற்றும் மோதிரத்தை கழற்றி விட்டு தப்பினார்.
ரத்தம் சொட்ட சொட்ட வெளியே வந்த மூதாட்டி, பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்த மாணவி, பின் காதலனுக்கு மொபைல் போன் வாங்க கொள்ளையில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பள்ளி மாணவன் குத்திக் கொலை
ஹரியானாவில் பரிதாபாதில் வசித்த 16 வயது மாணவன், இங்குள்ள பள்ளியில் பிளஸ் -1 படித்து வந்தார். நேற்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின், தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவர்களை பின் தொடர்ந்த சக மாணவர்கள் சிலர், அம்மாணவனுடன் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவனை சரமாரியாக குத்தினர்.
இதில் முகம், மார்பு, வயிறு, தோள்பட்டை என பல்வேறு இடங்களிலும் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அம்மாணவன் இறந்தார். பொதுமக்கள் கூடியதையடுத்து, கத்தியால் குத்திய மாணவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.
வேலைக்கு வந்த 13 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தம்பதி கைது
ஹரியானாவின் குருகிராம் பகுதியில் வசித்து வரும் கமல்ஜித் - மணீஷ் தம்பதி, தங்களது 3 வயது குழந்தையை பராமரிக்க, ஜார்க்கண்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தினர். கடந்த ஓராண்டாக வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்த நிலையில், சிறுமி படுகாயங்களுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதைப் பார்த்த தனியார் தொண்டு நிறுவனம் அளித்த புகாரைத் தொடர்ந்து, கமல்ஜித் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த சிறுமியை மீட்டனர். முகம், கைகள், கால்கள், உதடு, நெற்றி என பல்வேறு இடங்களில் படுகாயங்களுடன் இருந்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேகாலயாவில் ரூ.51 கோடி மதிப்பு போதைப் பொருட்கள் பறிமுதல்
மேகாலயாவில் சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், 51 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள், பணம் மற்றும் இலவசப் பொருட்களை பறிமுதல் செய்துஉள்ளனர்.
பாக்., தலிபான் பயங்கரவாதிகள் 12 பேர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில், கொடூரத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தெஹ்ரிக் - இ - பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 12 பேரை, அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். அவர்கள் வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
![]()
|
கல்லுாரி மாணவர்கள் 'கத்திச் சண்டை': ரயில் பயணியர் பீதி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 9:00 மணிக்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பேசின்பாலம் ரயில் நிலையம் அருகே சென்ற போது வடசென்னையில் உள்ள தியாகராஜா கல்லுாரி மற்றும் அம்பேத்கர் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்ட்டது.
அதனால் இரு கல்லுாரி மாணவர்களும் தாங்கள் வைத்திருந்த கத்தியை வீசி சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள விரட்டிச் சென்றனர். அதனால் ரயிலில் இருந்த மற்ற பயணியர் அச்சத்தில் அலறினர். சிலர் தங்களது அலைபேசியில் வீடியோ' எடுத்தனர்.
தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். மேற்கண்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவி கொலை: கணவர் கைது
கன்னியாகுமரி அருகே அழகப்பபுரம் நிலப்பாறையில் வேறு பெண்ணுடன் இருந்த தொடர்பை கண்டித்த மனைவி மேரி சைலஜாவை 40, கொலை செய்த கணவர் ஜார்ஜை 45, போலீசார் கைது செய்தனர்.
நிலப்பறையை சேர்ந்த கட்டட தொழிலாளியான ஜார்ஜூக்கும், மேரி சைலஜாவுக்கும் 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 13 வயதில் மகன், 11 வயதில் மகள் உள்ளனர். தன்னுடன் பணிபுரியும் வேறு பெண் ஒருவருடன் ஜார்ஜூக்கு தொடர்பு ஏற்பட்டதால்மேரி சைலஜா கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
ஜன.,27ல் ஏற்பட்ட சண்டையில் ஜார்ஜ் தாக்கியதில் மயக்கமடைந்த மேரி சைலஜா தனியார் மருத்துவமனையிலும், பின் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு இறந்தார். ஒரு முறை நினைவு திரும்பிய போது தாயாரிடம் கணவர் தாக்கியதை கூறியுள்ளார். ஜார்ஜை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்ணிடம் மோசடி; போலீஸ்காரர் கைது
புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு, கீழ சுப்ராயபுரத்தைச் சேர்ந்தவர் சுதா, 39; கணவரை இழந்த இவர், காய்கறி கடையில் வேலை செய்கிறார்; இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், காய்கறி வாங்க கடைக்கு வந்த திருநள்ளாறு செருமாவிலங்கையைச் சேர்ந்த போலீஸ்காரர் குணசேகரன்,44; என்பவருடன் சுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக குணசேகரன் உறுதி அளித்ததால், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.
![]()
|
இந்நிலையில், குணசேகரன், சுதாவிடம், 10 லட்சம் ரூபாய் கேட்டார். அவரும், நகைகள், சேமிப்பு பணம் மற்றும் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனை சேர்த்து, 7.5 லட்சம் ரூபாயை கொடுத்தார். பின், சுதா, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது, குணசேகரன் மறுத்து விட்டார். பணத்தை திருப்பி கேட்ட போது, ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, சுதா, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் வழக்கு பதிந்து, குணசேகரனை கைது செய்து விசாரிக்கிறார்.
வீட்டு பொருட்களை கொண்டு செல்வது போல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை- -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சூர், பார்த்திபனூர், ஐ.டி.ஐ., பகுதியில் உள்ள மூன்று கடைகளில் பிப்.5 இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடினர். போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற தார் பாயால் மூடப்பட்ட சரக்கு வாகனம் ஆங்காங்கே நின்று சென்றது தெரிந்தது. இதில் பயணம் செய்த வேலம்பட்டி கதிரவன் மகன் கவிமணி 31, பள்ளப்பட்டி வீரய்யா மகன் மகா பிரபு 25, நிலக்கோட்டை ராஜா மகன் அருண் பாண்டியன் 31, ஆகிய மூவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், திண்டுக்கல்லில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வீடு மாறுதலாகி செல்வது போல் வாகனத்தை ஓட்டிச்சென்று ஆட்கள் இல்லாத பகுதிகளில், டிரக்கை மறைவாக நிறுத்தி ஆங்காங்கே கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.