சென்னை : நாகை மாவட்டம், சவுரிராஜ பெருமாள் கோவிலில் கால சந்தி பூஜை, உச்சிக் கால பூஜை தொடர்ந்து நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு நான் தவறாமல் செல்வேன். சவுரிராஜ பெருமாளை போற்றி, ஐந்து ஆழ்வார்கள் பாடல் பாடியுள்ளனர்.
இக்கோவிலில், ஆறு கால பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கால சந்தி பூஜை, காலையில் நடத்தப்படும். கடவுளுக்கு தயிர் சாதம் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். பிற்பகலில் நடக்கும் உச்சிக் கால பூஜையில், சோறு, கூட்டு, குழம்பு, ரசம், கடவுளுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும்.
தற்போது, கால சந்தி பூஜை, உச்சிக் கால பூஜை நிறுத்தப்பட்டுள்ளது. ஆறு கால பூஜைகளில் இந்த இரண்டும் முக்கியம். பிரசாதம் தயாரிக்க அனுமதிக்கப்படுவது இல்லை.
இரண்டு பூஜைகளையும் நடத்தும்படி, அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை. எந்த காரணத்தை முன்னிட்டும், உற்சவங்களை நிறுத்தக் கூடாது.
எனவே, ஆகம விதிகளின்படி, கால சந்தி மற்றும் உச்சிக் கால பூஜை உள்பட அனைத்து பூஜைகளையும் நடத்த உத்தரவிட வேண்டும். ஆழ்வார்கள், ஆச்சாரியார்களின் பிறந்த நாள் நட்சத்திர விழாவை, மாதம்தோறும், ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறைக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.