திருவனந்தபுரம் : கேரளாவில், காதலனுக்கு 'மொபைல் போன்' வாங்க, மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையடித்த பிளஸ் 1 மாணவியை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூவாற்றுப்புழாவைச் சேர்ந்தவர் ஜலஜா, 60. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது, 17 வயது சிறுமி வீட்டுக்குள் நுழைந்து, அவரிடம் நகைளை கழற்றி தரும்படி கேட்டார். ஜலஜா மறுத்ததால் அவரது முகத்தில் மிளகாய் பொடியை துாவி, சுத்தியலால் பின் தலையில் தாக்கினார்; செயின் மற்றும் மோதிரத்தை கழற்றி விட்டு தப்பினார்.
ரத்தம் வடிந்தபடி வெளியே வந்த மூதாட்டி, பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்த மாணவி, பின் காதலனுக்கு மொபைல் போன் வாங்க கொள்ளையில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.