அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை:
தாவிய கட்சிக்கே தாவிய பழ.கருப்பையா, இனிமேல் எந்த கட்சிக்கும் தாவ முடியாத வயோதிகத்தில் இருப்பதால், புதிய கட்சியை துவக்கி விட்டார். ஒருவேளை, பழக்கதோஷத்தில் அவர் கட்சி மாறாமல் இருக்க வேண்டும் என, அந்த கட்சியில் இணைந்திருக்கும் நான்கு தொண்டர்கள், மஹாத்மா காந்தியிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஆனாலும், இவங்க கட்சி இருக்கிற நிலைமையில, இவருக்கு இவ்வளவு குசும்பு ஆகாது!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு, மனித நேய மக்கள் கட்சி களப்பணி ஆற்றி வருகிறது. பா.ஜ.,வின் ஓர் அங்கமாக, அ.தி.மு.க., மாறி விட்ட நிலையில், அக்கட்சிக்கு தகுந்த பாடத்தை ஈரோடு வாக்காளர்கள் வழங்க வேண்டும். பா.ஜ., உத்தரவின்படி பன்னீர்செல்வம், வேட்பாளரை விலக்கிக் கொண்டுள்ளார்.
ஈரோடில் உங்க களப்பணி, அ.தி.மு.க.,வுக்கு எதிராக இருப்பதை விட, பா.ஜ.,வுக்கு எதிராகவே இருக்கும் என்பது, 'பளிச்'னு தெரியுது!
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் மூகாம்பிகா ரத்தினம் அறிக்கை:
கேரளாவில் உள்ள அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலையில் பயிலும் மாணவியருக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை அளித்து, அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரி திட்டமாக இதை கேரள அரசு செயல்படுத்தியுள்ளது. மாணவியர் நலன் கருதி, தமிழகத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
'ஆழ்வார்பேட்டை ஆண்டவர்' தான், ஆளுங்கட்சிக்கு ரொம்ப வேண்டியவரா போயிட்டாரே... முதல்வரிடம் பேசி அமல்படுத்த சொல்லலாமே!
பா.ம.க., தலைவர் அன்பு மணி அறிக்கை:
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நெல் கொள்முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும், 1,000 மூட்டைகள் கூட நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை; இதனால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

நெல் கொள்முதல் இலக்கு குறித்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சில நாட்களுக்கு முன் பட்டியல் வாசிச்சாரே... அதெல்லாம் சும்மாவா?
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி:
சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான பிரசாரம் தேவையற்றது; அச்சின்னத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காது. கருணாநிதியின் சங்கத்தமிழ் காவியத்தின் அடையாளம், பேனா. சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள், இரண்டு வாரமா சுற்றுச்சூழல் நிபுணராகவே மாறிட்டாங்களே!