சேலம்: தனியார் மருத்துவமனையில் பெண் இறந்த ஆத்திரத்தில், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை உடைத்து ரகளையில்
ஈடுபட்ட அ.தி.மு.க., நிர்வாகி உள்பட, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே, ஏ.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மனைவி ரேவதி, 27. நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த, 4ல், சேலம், நான்கு ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மதியம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அதிகமான ரத்தப்போக்கால், இரவு, 8:30 மணிக்கு ரேவதி இறந்தார். அவரது உடலை உறவினர்கள் பெற்ற நிலையில் பச்சிளங்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று அந்த குழந்தையை, ரேவதியின் தந்தை சேட்டு, 50, தலைமையில், 6 பேர் பெற்றனர். பின் அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக குரல் எழுப்பி, வரவேற்பு அறையில் இருந்த சேர், கண்ணாடியை அடித்து உடைத்ததோடு, கம்ப்யூட்டர் மானிட்டர்களையும் தள்ளி விட்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில் மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்டது, ஏ.நாட்டாமங்கலம் ஊராட்சி துணைத்தலைவரான, அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., விவசாய அணி செயலர் சேட்டு என தெரிந்தது. அத்துடன், அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ், 23, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த கிளாரா மாங்சிங், 30, ஆகியோரும் தாக்கியது தெரிந்தது. இதனால், அந்த, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.