ஆத்துார்: தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி நவநீதகுமார் மனைவி மஞ்சு, 19. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, 2022 செப்., 18ல், தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததோடு, கர்ப்பப்பை அகற்றப்பட்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும், 13ல், சேலம் கலெக்டர், சுகாதாரத்துறை அலுவலர்கள், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கலெக்டர் கார்மேகம் உத்தரவுப்படி, ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா தலைமையில் சேலம் சுகாதார இணை இயக்குனர் நெடுமாறன், ஆத்துார் சுகாதார துணை இயக்குனர் ஜெமினி, சேலம் மருத்துவ கல்லுாரி மகப்பேறு பிரிவு துறை தலைவர் சண்முகவடிவு அடங்கிய குழு அமைக்கப்பட்டது. நேற்று, ஆர்.டி.ஓ., தலைமையில் குழுவினர், தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வேலுமணி, மருத்துவர், செவிலியர், ஆத்துார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், புகார் அளித்த மஞ்சு, அவரது குடும்பத்தினர் என, 12 பேரிடம் விசாரித்தனர்.