மண்ணெண்ணெய் குடித்த
சிறுவன் உயிரிழப்பு
மேட்டூர் அருகே மண்ணெண்ணெய் குடித்த சிறுவன் உயிரிழந்தான்.
மேட்டூர், ஆண்டிக்கரையை சேர்ந்தவர் சின்னுசாமி, 29. இவரது மனைவி சுகந்தி, 22. இவர்களது மகன் நிஷாந்த், 2. நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு சுகந்தி துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த், அடுப்பு அருகே இருந்த மண்ணெண்ணெயை குடித்து மயங்கியுள்ளார். மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நேற்று காலை உயிரிழந்தான். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
சார் - பதிவாளர் சிறையில் அடைப்பு
லஞ்ச வழக்கில் கைதாகி ரத்த கொதிப்பால் அவதிப்பட்ட சார் - பதிவாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.சேலம், தாதகாப்பட்டி பிரிவு சார் - பதிவாளர் செல்வப்பாண்டி, 52. இவர், புரோக்கர் கண்ணன், 40, மூலம் பட்டா பெயர் மாற்றத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். இதனால் கடந்த, 6ல் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின், மறுநாள் காலை, கண்ணன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ரத்த அழுத்தம் அதிகமாகி வலியால் அவதிப்பட்ட செல்வப்பாண்டி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி அறையில் போலீஸ் பாதுகாப்புடன் இரு நாள் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறினார். இதனால் நேற்று மாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரயில் சேவை ரத்து
மதுரை - திருமங்கலம் அருகே இரட்டை வழிப்பாதை பணி நடப்பதால், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி சேலம் வழியே, வரும், 14, 21, 28ல் புறப்படும் ஒகா - ராமேஸ்வரம் வார ரயில் சேலம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், பிப்., 17, 24, மார்ச் 3ல் கிளம்பம் ராமேஸ்வரம் - ஒகா வார ரயில், சேலத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில்களில், சேலம் முதல் ராமேஸ்வரம் வரையான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்., 10, 13, 17, 20, 24, 27ல் கிளம்பும் சண்டிகர் - மதுரை ரயில் ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். பிப்., 12, 15, 19, 22, 26, மார்ச், 1ல் புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் ரயில், ஈரோட்டில் இருந்து கிளம்பும். ஈரோடு முதல் மதுரை வரையான சேவை ரத்து செய்யப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தேங்காய் நார் கழிவில் தீ
தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர், ரங்கநாதபுரத்தில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு தேங்காய் நார் பதப்படுத்தும் மில் உள்ளது. அங்கு தேங்காய் நார் கழிவை குவித்து வைத்துள்ளனர். அதில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை முழுதும் அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மஞ்சள் காமாலை: மாணவர் பலி
தலைவாசல், சிறுவாச்சூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த, சக்திவேல் மகன் சாரதி, 11. அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார். மஞ்சள் காமாலையால் அவதிப்பட்ட மாணவர், கடந்த ஜன., 31ல் சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
எஸ்.ஐ.,யுடன் வம்பு
வாலிபருக்கு 'காப்பு'
சேலம், பிப். 9-
சேலம் டவுன் போலீஸ் எஸ்.ஐ., கோகிலா. இவர் நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது சேலம், பொன்னம்மாபேட்டை, தாண்டவம் நகரை சேர்ந்த மணிகண்டன், 27, ெஹல்மெட் அணியாமல் பைக்கில் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த எஸ்.ஐ.,யிடம் தகராறு செய்து ஒருமையில் பேசி வம்பு செய்துள்ளார். இது
குறித்து கோகிலா புகார்படி டவுன் போலீசார் விசாரித்தனர். அதில், மணிகண்டன், உணவு வினியோகிக்கும் தொழில் செய்வது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் வைத்து
வழிபட்ட பக்தர்கள்
சேலம்: சக்தி காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சேலம், தாதகாப்பட்டி சக்தி காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று காலை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து சக்தி அழைத்தல் நடந்தது. பின் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அக்னி கரகம், பூங்கரகம், மாவிளக்கு, அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள், சக்தி காளியம்மனை வழிபட்டனர். இன்று இரவு, 10:00 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் சத்தாபரண திருவீதி உலா, நாளை காலை, 10:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீர் திருவீதி உலாநடக்கிறது.
சேலத்தில் வரும் 15, 16ல்
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சேலம்: தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்ய, 'கள ஆய்வில் முதல்வர்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் வேலுார் சென்ற முதல்வர் ஸ்டாலின், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு ஆய்வு கூட்டம், சேலத்தில், வரும், 15, 16ல் நடக்க உள்ளன. அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். கலெக்டர்கள் உள்பட மாவட்ட அளவில் அனைத்துத்துறை அதிகாரிகள், போலீசாரும் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் ஆலோசனை நடத்த ஏதுவாக, 2021 - 22, 2022 -23ல் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப்பணி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் குறித்து துல்லியமாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றியம், தாலுகா வாரியாக புள்ளி விபரங்களை தொகுத்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி உதவித்தொகை
விண்ணப்பிக்க அழைப்பு
சேலம்: ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல் குறித்த ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது:
அரசு, அதன் உதவி பெறுபவை, சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், கிறிஸ்தவ மதம் மாறியவர், பழங்குடியின மாணவர்களுக்கு, 'போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவித்தொகை பெற இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, http://tnadtwscholarship.tn.gov.in எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது எழும் சந்தேகங்களை தீர்க்க, கல்லுாரிகளுக்கு கல்வி உதவித்தொகை பொறுப்பு அலுவலர்களை நியமிக்க ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பாலுாட்டியபோது
பச்சிளங்குழந்தை சாவு
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி கணவாய்புதுாரை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி தங்கமணி, 20. இவருக்கு, 15 நாளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. தங்கமணி குழந்தைக்கு, நேற்று முன்தினம் பாலுாட்டியுள்ளார். அப்போது குழந்தைக்கு புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பூலாவரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குழந்தையை அழைத்துச்சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்ததாக கூறினர். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பூசாரி வீட்டில் தீ: பணம், தங்கம் நாசம்
இடைப்பாடி: இடைப்பாடி, சின்னமணலியை சேர்ந்தவர் சுரேஷ், 44. எலக்ட்ரீஷியனான இவர், செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவில் பூசாரியாகவும் உள்ளார். நேற்று, தம்பதியர் வெளியே சென்ற நிலையில், காலை, 11:30 மணிக்கு அவர்களது ஓட்டு வீட்டில் இருந்து புகை அதிகளவில் வெளியேறியது. மக்கள் தகவல்படி இடைப்பாடி தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் சுரேஷ், தாயின் இருதய அறுவை சிகிச்சைக்கு சேமித்து வைத்திருந்த பணம், 3 பவுன் தங்கம், பட்டுப்புடவைகள், கட்டில், மிக்ஸி, 'டிவி' உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
நாளை பக்தர்களுக்கு வளையல்
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை மாலை, 6:30 மணிக்கு தை கடைசி வெள்ளி உற்சவம் நடக்க உள்ளது. இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்பட்ட, 18 ஆயிரம் வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
குறைதீர் கூட்டத்தில் 50 மனு
சேலம்: கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர், அவர்களை சார்ந்தோர், படையில் பணிபுரிவோரின் சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட அளவில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., மேனகா தலைமை வகித்தார். அதில் நிலப்பட்டா, வேலை வாய்ப்பு, குடும்ப ஓய்வூதியம், துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் உள்பட, 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னாள் படைவீரர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
சேலம்: உருக்காலை, 2வது நுழைவாயில் முன், சி.ஐ.டி.யு., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. உருக்காலை பணியாளர்
சங்கத்தலைவர் சித்தையன் தலைமை வகித்தார். அதில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ராணுவ பாதுகாப்பு தளவாட தொழில் உற்பத்தி மையத்தை, உருக்காலை பகுதியில் ஏற்படுத்தல்; உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பொதுச்செயலர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
விபத்தில் டிரைவர் சாவு
காடையாம்பட்டி: சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் இளங்கோ, 36. இவருக்கு மனைவி சரஸ்வதி, 32, பெண் குழந்தைகள், 3 பேர் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, 'டாடா ஏஸ்' மினி வேனில், சேலம் - தர்மபுரி சாலையில் இளங்கோ சென்றுகொண்டிருந்தார். தொப்பூர் அருகே தாபா முன் நிறுத்தப்பட்டிருந்த, மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி பின்புறம், வேன் மோதியது. படுகாயம் அடைந்த இளங்கோ, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவில் அவர் இறந்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் சக்கரத்தில் சிக்கியவர் பலி
ஆத்துார்: உடையம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம், 55. இவர், உறவினர் சதீஷூடன் நேற்று காலை, 5:30 மணிக்கு ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டுக்கு பூ வாங்க பைக்கில் வந்தார். அங்கு கடையில் பூ வாங்கி வந்த செல்வம், மயக்கம் ஏற்பட்டு சாலையில் விழுந்தார். அப்போது, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்ட அரசு பஸ்சின் சக்கரம், அவர் மீது ஏறியது. படுகாயமடைந்த அவர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.