ஏற்காடு: மலைக்கிராமத்தில் வைக்கோலில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள், வெடி மருந்துகளை ஏற்காடு போலீசார் கைப்பற்றினர்.
ஏற்காடு, பெரியேரிக்காட்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து வைத்திருப்பதாக, ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சுந்தர்ராஜன் வீடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதையறிந்து முன்னதாகவே சுந்தர்ராஜன் தலைமறைவானார். போலீசார் நடத்திய சோதனையில், சுந்தர்ராஜன் வீடு அருகே குவிக்கப்பட்டிருந்த வைக்கோலில், மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள் இரண்டு, 200 கிராம் கரி மருந்து, 300 கிராம் பால்ரஸ் குண்டுகளை கைப்பற்றினர். பின், சுந்தர்ராஜன் மீது வழக்குப்பதிந்து அவரை தேடுகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தலைவாசல் அருகே வெள்ளையூரை சேர்ந்த விவசாயி செல்வராஜ், 63. இவரது தோட்டத்தில் இருந்து நேற்று கால்நடைகளுக்கு வைக்கோல் எடுத்தார். அப்போது வைக்கோலுக்குள் இரு நாட்டு துப்பாக்கிகள் இருந்தன. இதுகுறித்து, வி.ஏ.ஓ., முத்தையனுக்கு தகவல் கொடுத்தார். அவர் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, வீரகனுார் போலீசில் ஒப்படைத்தார். உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்தது யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.