சேலம்: போடிநாயக்கன்பட்டி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 11 கோடி ரூபாய் மதிப்பு நிலம் மீட்கப்பட்டது.
சேலம், போடிநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, 2019ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது வழக்கு நடந்து வருகிறது. அதில், 3 ரோடு ஜவஹர் மில் இடத்தையொட்டி உள்ள கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மண்டல இணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் ராஜா, நில அளவீடு தாசில்தார் அறிவுடைநம்பி உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று அங்கு செல்ல முயன்றனர். அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. பேச்சு நடத்திய பின், காலை, 11:00 மணிக்கு நில அளவீடு பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
அதில், 'கோர்ட் உத்தரவுப்படி நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைவோர், ஆக்கிரமிப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. கோவிலுக்கு சொந்தமான, 8,000 சதுரடி நிலம் மட்டும் அளவீடு செய்து கம்பி வேலி போடப்பட்டது. அந்த நிலத்துக்கு பொக்லைன் மூலம், 6 அடி அகலத்துக்கு சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு, 11 கோடி ரூபாய். கோவில் இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், எந்த இடத்தில் இருந்தது என விசாரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அளவீடு பணியின்போது சேலம் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், செயல் அலுவலர் கலைச்செல்வி உடனிருந்தனர்.