சேலம்: ''தமிழகத்தில் புதுமை பெண் திட்டத்தில் சேலம் முதல் இடத்தில் உள்ளது,'' என, கலெக்டர் கார்மேகம் பேசினார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லுாரியில் புதுமை பெண், 2ம் கட்ட திட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது:
அரசு பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை படித்து உயர் கல்வி படிக்கும் மாணவியருக்கு, மாதம், 1,000 ரூபாய் புதுமை பெண்
திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, 2ம் கட்டமாக, 6,090 மாணவியருக்கு வங்கி பற்று அட்டை, புதுமை பெண் பெட்டக பை வழங்கப்பட்டன.
பெண் கல்விக்கு எந்த பெற்றோரும் பொருளாதார ரீதியில் சுமையாக கருதக்கூடாது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் முதல் கட்டத்தில், 8,016 பயனாளிகள், 2ம் கட்டத்தில், 6,090 பயனாளிகள் பயன்பெற உள்ளனர். தமிழகத்தில் புதுமை பெண் திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாணவியர், உயர்கல்வியை நன்றாக படித்து தகுதியான வேலையில் சேரவேண்டும். படிக்கும் காலத்தில் திறமையோடு செயல்பட கூடிய எண்ணத்தை உருவாக்கி, காலத்தை படிப்புக்கும், உயர்வுக்கும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, முதன்மை கல்வி அலுவலர் முருகன், சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.