டோக்கியோ: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில், உலகிலேயே ஜப்பான் முன்னோடியாக உள்ளது. ஜப்பானில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள், சிகிச்சை முறைகள் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகின்றன. இது தொடர்பான விபரங்களை அறிவதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை அழைப்பின்படி, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர், 5 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளனர். அந்த வகையில் இன்று (பிப்.,9) ‛டோக்கியோவில் கேன்சர் கட்டுப்பாடு' என்ற தலைப்பில் டோக்கியோ மாநகர அலுவலகத்தில் டாக்டர்.டொமோயோ நரிட்டா தலைமையில் நடந்த உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
இதனைத்தொடர்ந்து ஹச்சியோஜி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் தகாயுகி இஷிமோரி மற்றும் துணை மேயர் கியோகோ குய்ச்சி தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்தாலோசனை செய்தார்.