அரூர் போலீஸ் ஸ்டேஷனில்
மக்கள் குறைதீர் முகாம்
அரூர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில், அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, கம்பைநல்லுார் ஆகிய ஸ்டேஷன்களில் புகார் அளித்திருந்த மனுதாரர், எதிர் மனுதாரர் என இருதரப்பினரையும் நேரடியாக அழைத்து, 19 மனுக்கள் மீது, தீர்வு காணப்பட்டது. மேலும், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதும், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு, எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
கோவிலில் திருடியவர் கைது
தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்திலுள்ள காளியம்மன் மற்றும் ஐயப்பன் கோவிலுக்குள் கடந்த மாதம், 5ல் இரவு புகுந்த மர்ம நபர், 5 கிராம் தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து, காணிக்கையை திருடி சென்றார். இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., 13வது கவுன்சிலர் சஞ்சனா, 28, என்பவர், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். விசாரணையில்,கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் தாலுகா, சிக்கதாசரஹள்ளியை சேர்ந்த லட்சுமண், 36, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், தங்கக்காசுகளை
பறிமுதல் செய்தனர்.
பர்கூரில் கலெக்டர் ஆய்வு
பர்கூர் ஒன்றியம், காரகுப்பம், கந்திகுப்பம் மற்றும் ஒரப்பம் பஞ்.,களில் ஊரக வளர்ச்சி துறை சார்பில், 77.81 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பர்கூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்து இருப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, சித்தா பிரிவுகளை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பி.டி.ஓ., வெங்கட்டராம கணேஷ், பர்கூர் டவுன் பஞ்., செயல் அலுவலர் செந்தில், பொறியாளர்கள் செல்வம், அன்புமணி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
கல்லுாரி மாணவி மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுாரை சேர்ந்தவர் மூர்த்தி, கூலித்தொழிலாளி; இவருக்கு மூன்று மகள்கள். இதில் இரண்டாவது மகள் பிரீத்தி, 21, இருளப்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எட்., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 6ல் இரவு வீட்டிலிருந்து திடீரென மாயமானார். புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.ஜி.ஹெச்.,ல் ரத்த தான முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மூக்காரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். ஸ்டான்லி கல்வி நிறுவனங்கள் தலைவர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த் பிரகாஷ், இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்கள் தாளாளர் செல்வராஜ், சிகரம் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். முகாமில் கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ரத்த தானம் செய்தனர். மருத்துவ அலுவலர்கள் விக்னேஷ், சுதா, பிரபாகரன், இந்திய மருத்துவ சங்க அரூர், ஊத்தங்கரை கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருமணமாகாத ஏக்கத்தில்
தொழிலாளி தற்கொலைபாலக்கோடு தாலுகா, சித்ரப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 34; ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; திருமணமாகாததால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் மத்திகிரி கால்நடை பண்ணை செல்லும் வழியிலுள்ள புளியமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியார் பஸ் மோதி
பள்ளி மாணவர் பலிபோச்சம்பள்ளி அடுத்த, பாப்பானுாரை சேர்ந்தவர் நசீம், 35, கூலித்தொழிலாளி; இவரது மகன் முகமதுஅலி, 11; அரசம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல, சைக்கிளில் புலியூர் ஏரிக்கரை மீது பள்ளிக்கு சென்றபோது, தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.17 லட்சத்தில் சிறுவர் பூங்கா
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி ஏரி அருகே, சரவணா நகரில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறுவர் பூங்கா அமைக்க பூமி பூஜை நடந்தது. நகரமன்ற தலைவர் பரிதா நவாப் பணியை துவக்கி வைத்தார். நகர முன்னாள் துணை செயலாளர் குமார், நகர்மன்ற உறுப்பினர் அமுதா சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க
செக்போஸ்டில் எஸ்.பி., ஆய்வுகிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக - ஆந்திரா எல்லையில், பர்கூர் அருகே குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி, வேப்பனஹள்ளி அருகே, கர்நாடகா மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள நேரலகிரி சோதனைச்சாவடி, கிருஷ்ணகிரி டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு
எஸ்.பி., சுஜாதா ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம்
கூறுகையில், ''ரேஷன் அரிசி கடத்தலில் சிக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
அரசு மகளிர் பள்ளியில்
கராத்தே பயிற்சி துவக்கம்தர்மபுரி, இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவியருக்கு, நேற்று கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கியது. மாநில திட்ட இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியை, சி.இ.ஓ., குணசேகரன் துவக்கி வைத்தார்.
இதில், அப்பள்ளியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவியர் கராத்தே தற்காப்பு கலை பயிற்சி பெற்றனர். மாவட்ட ஆய்வாளர் பொன்னுசாமி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டனர்.
இதில், தென்னிந்திய கராத்தே அசோசியேசன் தலைவர் கியோஷி நடராஜ் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளித்தார். தலைமை ஆசிரியர் ரமா உள்பட பலர் பங்கேற்றனர்.
கோவில் நிலம்
குத்தகை மறு ஏலம்போச்சம்பள்ளி அடுத்த, ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 4.10 ஏக்கர் நிலத்துக்கு அறநிலையத்துறை சார்பில் கடந்தாண்டு டிச., 26ல் குத்தகை ஏலம் நடந்தது. இதில் அறநிலையத்துறை நிர்ணயித்த தொகைக்கு ஏலம் போகாமல், குறைந்த தொகைக்கு ஏலம் போனதாக கூறி, அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் ஏலம் நடந்தது. கடந்த ஏலத்தில் போன தொகையை விட வருடத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக போனது. இதில், போச்சம்பள்ளி பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
பஞ்., அலுவலகம் கட்ட பூமிபூஜை
கெலமங்கலம் ஒன்றியம், ஊடேதுர்க்கம் பஞ்., யூ.கொத்தப்பள்ளி கிராமத்தில், புதிய பஞ்., அலுவலகம் கட்ட, தேசிய ஊரக வேலை திட்டம் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தில் இருந்து, 39.95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், நேற்று பூமிபூஜை செய்து, கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
பி.டி.ஓ., சென்னகிருஷ்ணன், சாந்தலட்சுமி, பஞ்., தலைவி பாக்கியலட்சுமி, துணைத்தலைவர் அசோக், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட, நாகரசம்பட்டி அடுத்த, மருதேரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது.இதில் வேளாண், சுகாதாரம், தீயணைப்பு, ஊரக உள்ளாட்சி, சத்துணவு, அங்கன்வாடி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறையிலும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக பேசினர்.
மேலும், 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, தாசில்தார் திலகம் மற்றும் ஆர்.ஐ.,கள், வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.
சாலை பணிக்கு பூமி பூஜை
நல்லம்பள்ளி யூனியன் எ.ஜெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட எர்ரப்பட்டியில், 4.30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நல்லம்பள்ளி யூனியன் சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி, யூனியன் கவுன்சிலர் சோனியாகாந்தி வெங்கடேஷன், பா.ம.க., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட, பலர் பங்கேற்றனர்.தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
ஊத்தங்கரை, அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலா தலைமை வகித்தார், தர்மபுரி மாவட்ட மருத்துவ சேவை பிரிவு துணை இயக்குனர் (தொழுநோய்) மருத்துவர் புவனேஸ்வரி, மாணவ, மாணவியருக்கு, தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார். இதில், 600 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பஞ்சமூர்த்தி, சதீஸ்குமார், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ரூ.22 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்துக்கு, 41 பேர் வந்திருந்தனர். இவர்கள், 82 குவியல்களாக, 3,118 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 565 முதல், 761 ரூபாய் வரை சராசரியாக, 701 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 21 லட்சத்து, 86 ஆயிரத்து, 325 ரூபாய். நேற்று நடந்த இந்த ஏலத்தால், 32 ஆயிரத்து, 792 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்திந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில், கோரிக்கையைவலியுறுத்தி, தர்மபுரி பாரதிபுரம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வணங்காமுடி தலைமை வகித்தார். என்.எப்.டி.இ., மாவட்ட செயலாளர் மணி பேசினார். இதில், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த அடிப் படையில், கடந்த ஜன., முதல் பி.எஸ்.என்.எல்.,
ஓய்வூதியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசை
கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் வேடியப்பன், மாவட்ட பொருளாளர் குப்புசாமி, நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், மணி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதே போல், கிருஷ்ணகிரி, லண்டன் போட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பும் நடந்தது.
ஆங்கிலத்துறையில் கருத்தரங்கு
காரிமங்கலம் அடுத்த பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழகத்தில், பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பாக,'வெற்றிகரமான வாழ்க்கைக்கு உணர்வுபூர்வமான நுண்ணறிவை மேம்படுத்துதல்' என்ற
ஒரு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது.
பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். இதில், சென்னை புது கல்லுாரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் அப்துல் ஹாதி பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ், உதவி பேராசிரியை உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஆராய்ச்சி மாணவர்களான முத்தரசு, நந்தினி, நந்தகுமார், ஷாலினி, கல்பனா மற்றும் அபிராமி ஆகியோர் செய்திருந்தனர்.
பள்ளிக்கு ரூ.6.10 லட்சத்தில்
கணினி ஆய்வகம் வழங்கல்மும்பையை சார்ந்த தொழுநோயாளர் காலனியில் செயல்படும், அபினர் தன்யன் மந்திர் பொது அறக்கட்டளையை சார்ந்த பள்ளியில் படிக்கும், 400 மாணவ, மாணவியருக்கு கணினி அறிவியலை கற்பிக்க, போதிய அளவு கணினிகள் இல்லை. இதனால், கணினி ஆய்வகம் அமைக்க உதவுமாறு பள்ளி நிர்வாகத்தினர், கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி., நிறுவனத்தை அணுகினர்.
இதையடுத்து, ஐ.வி.டி.பி., நிறுவனர் குழந்தை பிரான்சிஸ், அப்பள்ளிக்கு, 6.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 16 கணினிகளை வழங்கி, அக்கணினி ஆய்வகத்தை திறந்து வைத்தார். மேலும் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி, 1.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான டின்னர் செட்டுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். இதில், மும்பை அலர்ட் இந்தியா நிறுவனர் அந்தோணிசாமி, பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம்
அதிகரிக்க மீளாய்வு கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, பிப். 9--
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்
களுக்கான முதல் திருப்புதல் தேர்வு தேர்ச்சி குறித்த, மீளாய்வு கூட்டம், தலைமை ஆசிரியர் பிரபாகர் தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி முன்னிலை வகித்தார். பள்ளி பி.டி.ஏ., சரவணன் பேசினார். மாணவர்களின் நலன் கருதி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தினமும் இரவு, 7:30 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்துதல், இதற்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு, மாணவர் களுக்கான பாதுகாப்பு, பள்ளி வளாகத்தில் இரவுநேர ஒளி ஏற்பாடு செய்தல், மாலை நேரத்தில் மாணவர் களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓங்காளியம்மன்
கோவில் தீமிதி திருவிழா
பெரும்பாலை, பிப். 9-
தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே ஆலாமரத்துார் கிராமத்தில், ஓங்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில், சாணராப்பட்டி, சோளிக்கவுண்டனுார், பூதநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் சேர்ந்து, தீமிதி திருவிழா கொண்டாடி வருகின்றனர்.
நேற்று நடந்த திருவிழாவில், ஐந்து ஊர்மக்கள் ஒன்றிணைந்து ரோணிப்பட்டி நாகாவதி ஆற்றி
லிருந்து சக்தி கரகம் அழைத்து, ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். அங்கு அமைத்திருந்த
தீக்குண்டத்தில், கோவில் பூசாரிகள் மற்றும்
ஏராளமான பக்கதர்கள் தீ மிதித்தனர்.
மேலும், விவசாயம் செழிக்கவும், தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையிலும்
குண்டத்தில் உப்பை கொட்டி வழிபட்டனர். மாலையில், ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நுகர்வோர் பாதுகாப்பு
சட்ட விழிப்புணர்வு முகாம்
ஓசூர், பிப். 9-
ஓசூர், சீத்தாராம்மேடு அரசு உருது பள்ளியில், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பிரசார முகாம் நடந்தது. நம் உரிமை- மனிதம் அறக்கட்டளை நிறுவனர் ராம்குமார் தலைமை வகித்தார்.
தலைமையாசிரியை தேவசேனா வரவேற்றார். தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தம், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், ஆடிட்டர் பாலசுந்தரம், ஹோஸ்டியா சங்க முன்னாள் தலைவர் ஞானசேகரன் உட்பட பலர் பேசினர்.
நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி இளஞ்செழியன், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ராஜா, நிழல் அறக்கட்டளை நிறுவனர் கண்மணி உட்பட பலர் பங்கேற்றனர். இறுதியில், மாணவர்களை உறுப்பினராக கொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டது.
அரூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா
அரூர், பிப். 9-
அரூரில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் சார்பில், தேவாதியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும், தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அச்சமூக மக்களின் வியாபாரம் மேம்பாடு அடையவும், குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை உள்ளிட்டவைகளை வேண்டி நடத்தப்படும், இந்த தேவாதியம்மன் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.
அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபம் பின்புறம் தேவாதியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள, ஆவாரம் செடியின் அடியில், நேற்று முன்தினம் இரவு, நேர்த்திக்கடனாக, 22 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன. தொடர்ந்து நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 225 ஆட்டு கிடாய்கள் அம்மனுக்கு பலியிடப்பட்டன. பின், அதன் இறைச்சிகளை அச்சமூகத்தை சேர்ந்த, 2,275 குடும்பத்தினருக்கு பங்கிட்டு வழங்கப்பட்டன.
செந்தில் பப்ளிக் பள்ளியில்
தேசிய இளைஞர் தின விழா
தர்மபுரி, பிப். 9-
தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில், தேசிய இளைஞர் தினவிழா நடந்தது.
செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி தலைமை வகித்தனர். செயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, இளைஞர்கள் பொறுப்புள்ள குடிமகன்களாக வருவதன் முக்கியத்தும் குறித்து, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அவர், மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பின்னர், பள்ளி தலைவர் கந்தசாமி பேசினார். இதையடுத்து, இப்பள்ளியை சேர்ந்த, 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில், பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் செந்தில்முருகன், பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
கடையில் கலப்பட பொருள்
ரூ.25 ஆயிரம் அபராதம்
பாலக்கோடு, பிப். 9-
பாலக்கோடு சுற்று வட்டாரத்தில் டீ கடை, பேக்கரிகளில் தரமற்ற உணவு பொருட்களை விற்பதாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்திக்கு புகார் வந்தது.
அதன்படி மாவட்ட உணவு அலுவலர் பானுசுஜாதா உத்தரவின்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, கனவனள்ளி பூமரத்துபள்ளம், ஐந்தாவது மைல்கல், ஆத்துக்கொட்டாய், கரகூர் ஆகிய பகுதிகளிலுள்ள டீக்கடை, பேக்கரி, மளிகை, குளிர்பான கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கடைகளில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் கலப்பட தேயிலை பயன்படுத்தியது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு, 5 கடைகளுக்கு தலா, 1,000 வீதம், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், காலாவதியான உணவு பொருட்கள் வனஸ்பதி, ரவை, கடலை மாவு மற்றும் உரிய தேதியில்லாத, முத்திரையிடாத தின்பண்டங்கள் வைத்திருந்த இரண்டு மளிகை கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.