கிருஷ்ணகிரி: மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், புதுமை பெண் திட்டத்தில், இரண்டாவது கட்டமாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இதில், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உயர்கல்வி உறுதி திட்டத்தில் ஏற்கனவே, 2,041 மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக, ஆறு முதல், பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கு கல்வி உதவி தொகைக்கான ஆணை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில், 45 கல்லுாரிகளில் பயிலும், 2,649 மாணவியிருக்கு புதுமைப்பெண் சான்றிதழ் கோப்புறை மற்றும் மாதந்தோறும், 1,000 ரூபாய் பெறும், வங்கி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவியர் உயர்கல்வி முடிக்கும் வரை அவர்களது, வங்கி கணக்கில் மாதந்தோறும், 1,00-0 ரூபாய் செலுத்தப்படும். பிற கல்வி உதவித்தொகைகளை மாணவியர் பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.