கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் வட்டம் பையூர் கிராமத்தில், அதியமான் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் நான்காமாண்டு மாணவியர், ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவத்திற்காக, இலை வண்ண அட்டை பயன்படுத்தும் முறை குறித்து, விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.
அப்போது அவர்கள், பயிரின் தேவையறிந்து உரமிட இலை வண்ண அட்டை உதவுகிறது. இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து தழைச்சத்து மேலாண்மை முடிவு செய்யப்படுகிறது. இலையின் பச்சைய அளவை மதிப்பிடுவது நடவு நட்ட, 14ம் நாளிலிருந்து அல்லது விதைத்த, 21ம் நாளிலிருந்து ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டும். மதிப்பீடு செய்ய ஏற்ற இலை, முழுதாய் வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாவது ஆகும். மதிப்பீடு செய்ய குறைந்த பட்சம், 10 இலைகள் இங்கும் அங்குமாக தேர்வு செய்ய வேண்டும். அளவிடும் காலம், பொதுவாக ஒரு பயிருக்கு ஒரு குறிப்பிட்ட நேரமாக இருக்க வேண்டும். வண்ண அட்டையை கொண்டு, இலையின் வண்ணத்தை ஒப்பிடும்போது, சூரியவெளிச்சம், இலையில் நேரடியாக படாதவாறு அளவிடுபவர் நிற்க வேண்டும்.
இவ்வாறு, வேளாண் மாணவியர் விளக்கமளித்தனர்.