தர்மபுரி: புதுப்பெண் திட்டத்தில், தர்மபுரியில் இரண்டாம் கட்டமாக, 4,282 பேருக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி நிதியுதவி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து பேசியதாவது:
தர்மபுரியில், கடந்த, செப்., 11ல், புதுமைப்பெண் திட்டத்தில், 5,579 மாணவியருக்கு புதுமை பெண் பெட்டகம் மற்றும் அவர்களது வங்கி கணக்கில் தலா, 1,000 ரூபாய் செலுத்தப்பட்டது. கடந்த, ஐந்து மாதங்களாக, அவர்களது வங்கி கணக்கில், இரண்டு கோடியே, 78 ஆயிரத்து, 50 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக, 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து, முதன்முறையாக இளங்கலை, பட்டயம், தொழில்நுட்ப கல்வி முதலாமாண்டு படிக்கும், 4,282 மாணவியருக்கு புதுமைப்பெண் பெட்டகத்துடன் ஏ.டி.எம்., டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இதில், 100 பயனாளிகளுக்கு மேடையில் ஏ.டி.எம்., டெபிட் கார்டு, வேலைவாய்ப்பு வழிகாட்டு புத்தகம் மற்றும் நிதிநிலைக்கான கல்வியறிவு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்றே அவர்களது வங்கி கணக்கில், 1,000 ரூபாய் செலுத்தப்பட்டு, ஏ.டி.எம்., டெபிட் கார்டு தபால் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 9,852 பேர் பயன்பெறுகின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், கல்லுாரி கல்வி இயக்க மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, மாவட்ட சமூக அலுவலர் (பொ) ஜான்சிராணி, அரசு கல்லுாரி முதல்வர்கள் தர்மபுரி கிள்ளிவளவன், பாலக்கோடு செண்பகவள்ளி, சி.இ.ஓ., குணசேகரன் உட்பட, பலர் பங்கேற்றனர்.