கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் பணி நிரந்தரம் கோரி, கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கவுரவ விரிவுரையாளர்களாக, 59 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் கடந்த, 20 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகள்படி தகுதியுள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் இல்லை.
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்தனர். தேர்தலுக்கு பின், தற்போதைய, தி.மு.க., அரசு அதை கண்டு கொள்ளவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளாக அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் நிரந்தரமாக்கப்படுவர் என்ற அறிவிப்பும், காற்றில் பறந்துள்ளது. கிடைக்கும் தொகுப்பூதியமும் போதுமானதாக இல்லை; அதையும் முறையாக வழங்குவதில்லை. கடந்த, 2020ல் இதே கல்லுாரியில் பணிபுரிந்த கவுரவ விரிவுரையாளர் ராஜா கொரோனாவால் இறந்தார். அவருக்கும் அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை. ஆய்வு படிப்பில் இந்தியளவில் தங்கம் பெற்றவர் கூட, இக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளராகவே தொடர்கிறார். தமிழகம் முழுவதும் அரசு கல்லுாரி அனைத்து கவுரவ விரிவுரையாளர் சங்கங்களை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கவுரவ விரிவுரையாளர்கள் பால்ராஜ், செந்தில், முரளி, ராஜா உள்பட, 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.