ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பிரசாரத்தில், மோதிரக்கையுடன் பிரசாரத்தில், 'மோதிரம் பொன்னுசாமி' கலக்கி வருகிறார்.
தமிழகத்தில் மோதிரம் என்றால், ஸ்ரீவில்லிபுத்துார் முன்னாள் எம்.எல்.ஏ., தாமரைக்கனியை யாரும் மறக்க முடியாது. அதே ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்ராயிருப்பை சேர்ந்தவர், 'மோதிரம்' பொன்னுசாமி,65. அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசி. இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மீது கொண்ட பற்றால், 10 பவுனில் எம்.ஜி.ஆர்., படத்துடன் கூடிய பிரமாண்ட மோதிரத்தை, 1987 முதல் கையில் அணிந்துள்ளார்.
கடந்த, 1991ல் ஜெயலலிதா முதல்வரானதும், அவரது உருவப்படத்துடன், 11 பவுனில் தங்க மோதிரத்தை செய்து, தன் விரலில் மாட்டி பெருமை பட்டு கொண்டார்.
பழனிசாமி முதல்வரானதும், 80 கிராம் வெள்ளியில் மற்றொரு மோதிரத்தை செய்து அதையும், எம்.ஜி.ஆர்., படத்துடன், 80 கிராமில் மற்றொரு வெள்ளி மோதிரத்தையும் அணிந்துள்ளார்.
மோதிரக்கை குறித்து அவர் கூறியதாவது: எனக்கு மோதிரத்தின் மீதும், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா மீதும் கடும் பற்று உண்டு. அ.தி.மு.க.,வை வழி நடத்தும் பழனிசாமி மீதும் பற்று கொண்டுள்ளேன். அதனால், அவர்கள் படங்களுடன் மோதிரம் அணிந்துள்ளேன். அ.தி.மு.க.,வை பலரும், பல வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். நான் செல்லும் இடங்களில் எல்லாம், என் முகத்தை
விட மோதிரத்தை எல்லோரும் பார்ப்பார்
கள். அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, பழனிசாமியை தெரிந்து வைத்துள்ளதால், என்னிடம் மோதிரம் பற்றி விசாரிப்பர். பலருக்கும் இதுபோன்ற பெரிய மோதிரம் அணிய வேண்டும் என ஆசை உண்டு. ஆனால், நான் அதை நிறைவேற்றி எப்போதும் கையில் போட்டிருப்பதை பெருமையாக நினைக்கிறேன். இவ்வளவு பெரிய மோதிரம் அணிந்திருப்பதை நான் எப்போதும் சிரமமாக நினைத்ததில்லை. அந்த மோதிரத்திலும், என் கையிலும் என் தலைவரை துாக்கி சுமப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
இவ்வாறு கூறினார்.
இவர் ஈரோடு கிழக்கு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். வீடு, கடைகள், வீதிகளில் நிற்பவர்கள், கார்களில் அமர்ந்திருப்பவர்களிடம் கூட சென்று பிரசாரம் செய்யும் அவரை பார்த்ததும், 'இந்த மோதிரம் எவ்வளவு பவுன், மோதிரத்தை அணிந்து செல்ல பயமாக இல்லையா, உங்க கையை மட்டும் கழட்டி கொடுங்க சார்' என பல கமென்ட்கள் அடித்து வாக்காளர்கள், பொதுமக்கள் அவரை உற்சாகப்படுத்தினர். பல வி.ஐ.பி.,க்கள் பிரசாரம் கூட, வாக்காளர்களிடம் எடுபடாத நிலையில், பொன்னுசாமியின் பிரசாரத்தைவிட, அவரது மோதிரக்கை, மக்களிடம் அதிகம் சென்றடைகிறது.