சிறப்பு காவல் படை போலீசார் 160 பேர் தேர்தல்
பாதுகாப்புக்கு வருகை
தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் இருந்து, இரு குழுவினர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், 27ல் நடக்கிறது. 238 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டு, தேர்தல் ஓட்டு பதிவுக்காக தயார்படுத்தும் பணி நடக்கிறது. அதில், 32 ஓட்டு சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு கூடுதல் கண்காணிப்பு, பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக நேற்று, ஆவடி, வேலுார் தமிழ்நாடு சிறப்பு காவல் படைபிரிவிலிருந்து, 160 பேர் இரு குழுவினராக ஈரோட்டுக்கு வந்தனர். இவர்கள், ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஓட்டு பெட்டிகள் மீண்டும் தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் இருப்பர்.
தபால் ஓட்டுக்கு
50 போலீசார் விண்ணப்பம்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தபால் ஓட்டுக்கு, 50 போலீசார் விண்ணப்பித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும், 27ல் நடக்கிறது. கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் போலீசார், தபால் மூலம் ஓட்டுகளை செலுத்த வசதியாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பத்தை ஈரோடு போலீஸ் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்து பெற்று கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 60 விண்ணப்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. 50 பேர் விண்ணப்பங்களை வாங்கி தபால் ஓட்டுக்காக பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
பன்னீர் அணி நிர்வாகி
தி.மு.க.,வுக்கு ஆதரவு
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியுடன், பன்னீர்செல்வம் இணக்கம் காட்டுவதை கண்டித்து, பன்னீர் அணி மாநில நிர்வாகி அங்கிருந்து விலகி, தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாடநுால் கழக முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பன்னீர் அணி சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்த லியாகத் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகினார். ஈரோட்டில் நேற்று, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதுபோல, பா.ஜ., ஈரோடு மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி சீனிவாசன், அங்கிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார்.