மழைநீர் வடிகால் வசதி
செய்து தரப்படுமா?
கரூர்-ஈரோடு சாலை, கோதுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அப்பகுதிகளில்,
போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி, டூவீலர்களில் கூட செல்ல முடியாமல்,
சேரும், சகதியுமாக இருக்கும். இதனால் அப்பகுதி மக்கள் பெரும்
அவதிக்குள்ளாகி வருவர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. எனவே, கோதுாரில்
மழைநீர் வடிகால் வசதி செய்து தர, கரூர் மாநகராட்சி நிர்வாகம்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூ மார்க்கெட் பகுதியில்
சுகாதார சீர்கேடு
கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே பூ மார்க்கெட் பகுதியில்,
ஓட்டல்கள், டீ கடைகள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பை தேங்கியுள்ளன. இவற்றை அகற்றாததால்,
அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்படும் அபாயமும்
உள்ளது. எனவே, பூ மார்க்கெட் சாலையில் தேங்கியுள்ள,
குப்பையை நாள்தோறும் அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தாம்புதுாரில் நிழற்கூடத்தை
சீரமைக்க வேண்டுகோள்
கரூர் அருகே புத்தாம்புதுாரில் பொதுமக்கள் வசதிக்காக பயணிகள்
நிழற்கூடம் அமைக்கப்பட்டது. நாளடைவில் இந்த நிழற்கூடம்
சேதமடைந்துள்ளது. இதனால், நிழற்கூடத்தை பயணிகள்
பயன்படுத்துவதில்லை. பஸ் டிரைவர்களும் நிழற்கூடத்தை விட்டு
தள்ளி பஸ்களை நிறுத்துகின்றனர். இதனால், புத்தாம்புதுாரில்
பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மழையிலும், வெயிலிலும்
நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கோடைக்காலம்
நெருங்கும் நிலையில் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க
வேண்டியது அவசியம்.
லாலாப்பேட்டைக்கு
சிவனடியார் குழு வருகை
லாலாப்பேட்டை செம்பொற் ஜோதீஸ்வரர் சிவன் கோவிலில் தென் கைலாய பக்தி பேரவை சிவனடியார்கள் குழுவினர் வழிபட்டனர்.
பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 பேர் கொண்ட சிவனடியார் குழுவினர், வெள்ளியங்கிரி மலைக்கு மகா சிவராத்திரி வழிபாட்டிற்கு யாத்திரை செல்கின்றனர். இவர்கள், பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்டு, நேற்று காலை லாலாப்பேட்டை சிவன் கோவிலுக்கு வந்தனர். பின், சிவனடியார்கள் குழுவினர், செம்பொற் ஜோதீஸ்வரர் மற்றும் அம்மனை வழிபட்டனர். கோவில் வளாகத்தில் ஓய்வு எடுத்த அவர்கள், மாலையில், மாயனுார் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்றனர். சிவனடியார்கள் குழுவினர், சிவன் அலங்காரம் செய்யப்பட்ட சிறிய ரதத்தை இழுத்து சென்றனர்.
பாசன வாய்க்காலில்
துாய்மை பணி
கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி பாசன வாய்க்காலில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி, லாலாப்பேட்டை மேம்பாலம் வழியாக சிறிய பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் மூலம் அப்பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வாழை, வெற்றிலை, நெல் ஆகியவற்றை, இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த சிறிய பாசன வாய்க்காலில் நாணல் செடிகள் அதிகமாக வளர்ந்து நீரோட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. தற்போது பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம், சிறிய பாசன வாய்க்காலில் நாணல் செடிகளை அகற்றி துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வெங்கமேடு, க.பரமத்தியில்
2 மூதாட்டிகள் மாயம்
வெங்கமேடு, க.பரமத்தியில் 2 மூதாட்டிகளை காணவில்லை என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர், வெங்கமேடு, வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்த, கந்தசாமி என்பவரது மனைவி சரஸ்வதி, 76; இவர் கடந்த மாதம், 18ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பிறகு, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சரஸ்வதியின் மகன் மகேஷ், 45; கொடுத்த புகாரின் படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல், க.பரமத்தி அருகே கொளத்துார்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி பழனியம்மாள், 70; கடந்த, 3ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. இதனால், பழனியம்மாளின் மகள் மகாலட்சுமி, 45; கொடுத்த புகாரின் படி, க.பரமத்தி போலீசார் விசாரிக்கினற்னர்.
ரயிலில் அடிபட்டு
ஒருவர் பலி
மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலுக்கு செல்லும் வழி அருகே, ரயிலில் அடிபட்டு உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு செல்லும் வழி அருகே, ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். தகவலறிந்த கரூர் ரயில்வே போலீசார் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின், அந்த நபர் யார்-? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
உடல்நல குறைவால்
பெண் தற்கொலை
கரூர் அருகே, உடல்நலக்குறைவால், பெண் கூலி தொழிலாளி, தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், செல்லாண்டிப்பட்டி குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பிச்சை என்பவரது மனைவி செல்வம், 55; கூலி வேலை செய்து வந்தார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். அறுவை சிகிச்சை செய்தும் பலன் இல்லாததால், மனமுடைந்த செல்வம், கடந்த 5ல் விஷம் குடித்தார்.
பின், ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம்
உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல்வர் கோப்பை
விளையாட்டு போட்டி தொடக்கம்
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.
பின், அவர், கூறியதாவது: மாணவ, மாணவியருக்கு கல்வியோடு விளையாட்டும் தேவை. அதன்படி, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் இரு பாலரும் பங்கேற்கும், மாவட்ட அளவில் 43 வகையான போட்டிகளும், மண்டல அளவிலான 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 51 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 588 நபர்களுக்கும், ஒவ்வொரு மண்டலத்திலும் 40 நபர்களுக்கும் என மாநிலம் முழுதும், 71,592 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர், கூறினார்.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., லியாகத், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், சப்-கலெக்டர் சைபுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
12ல் இலவச கண்
பரிசோதனை முகாம்
புகழூரில் வரும் 12ல் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது என, டி.என்.பி.எல்., ஆலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், புகழூர் டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், டி.என்.பி.எல்., ஆலை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில், வரும் 12ம் தேதி காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை, இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. இதில், சுற்று வட்டார கிராம பகுதிகளிலிருந்து கண் குறைபாடு உள்ளவர்களை அழைத்து வர, புன்னம்சத்திரம், தளவாப்பாளையம், நொய்யல் குறுக்கு சாலை, வேலாயுதம்பாளையம், ஓனவாக்கல்மேடு ஆகிய 5 வழித்தடங்களில் ஆலை நிர்வாகம் பஸ் வசதி ஏற்பாடு செய்துள்ளது. முகாமுக்கு வருபவர்கள் ஆதார் அட்டை நகல், மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுண்டம்மன் கோவில்
ஆண்டு கும்பாபிேஷக விழா
குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்களால் சவுண்டம்மன் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதன் ஓராண்டு நிறைவு நாளையொட்டி ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு அப்பகுதி பெண்கள்
ஊர்வலமாக சீர் கொண்டுவந்தனர். அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடத்தப்பட்டது.
மர்ம விலங்குகள் கடித்து
ஆடுகள் பலி: விவசாயிகள் அச்சம்சேந்தமங்கலம் அருகே, கொல்லிமலை அடிவாரம் பெரியபள்ளம்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்குகள் கடித்து, ஆடுகள் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்வதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கொல்லிமலை அடிவாரம், வாழவந்திகோம்பை பஞ்., பகுதிக்கு உட்பட்ட சின்னபள்ளம்பாறை, பெரியபள்ளம்பாறை, வனப் பகுதிகளில் மர்ம விலங்கினங்கள் (செந்நாய், கரடி) இப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருவதாக புகார் எழுந்துள்ளது. பெரியபள்ளம்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி குப்புசாமி, 42, பல ஆண்டுகளாக ஆடுகள், கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், இவரது 2 ஆடுகள், 4 ஆட்டு குட்டிகள், 3 கோழிகள் ஆகியவற்றை மர்ம விலங்குகள் கடித்து குதறி சென்றுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, மர்ம விலங்குகளை பிடிக்க, மாவட்ட நிர்வாகம், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என கொல்லிமலை அடிவார பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நண்பரின் மனைவியை
தாக்கியவர் கைதுவெண்ணந்துார் நண்பரின் மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார், பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். அதே பகுதியில் விசைத்தறி ஓட்டும் கூலி தொழிலாளி. கடந்த, 31ம் தேதி வடுகம்பாளையத்தைச் சேர்ந்த தனபால், 31, மற்றும் வெண்ணந்துாரை சேர்ந்த மணி ஆகிய இருவரும், கணேசனை அழைத்துக் கொண்டு மல்லசமுத்திரம் அருகே உள்ள தாபா ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டனர். கணேசனுக்கு பில் கொடுக்கவில்லை.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு திரும்பினர். பின்னர், 7 ம் தேதி கணேசனின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவி யோகேஸ்வரிடம்,38, தனபால் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். கணேசன் மனைவி லோகேஸ்வரி, வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் படி, போலீசார், தனபாலை கைது செய்தனர்.
டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி
கல்லுாரி மாணவன் பலிதிருச்செங்கோடு அருகே தனியார் கல்லுாரி மாணவன், பஸ்ஸில் ஏறும் போது தவறி விழுந்ததில், பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருச்செங்கோடு பரமத்தி வேலுார் ரோட்டில் அறநிலையத்துறை சார்பில் நடத்தபடும் அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரியில் திருச்செங்கோடு, எஸ்.என்.டி.,ரோடு பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் மகன் சரவணன், 19. பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
மாலை கல்லுாரி முடிந்த பின், ஜேடர்பாளையத்தில் இருந்து திருச்செங்கோடு வரும் அரசு டவுன் பஸ்சை நிறுத்துவதற்குள் இடம் பிடிக்க ஓடி ஏறினார். அப்போது தவறி விழுந்ததில் பஸ்ஸின் பின்பக்க சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தீ விபத்தில் குடிசை வீடு சாம்பல்
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே உள்ள கரைப்பாளத்தைச் சேர்ந்தவர் தங்கவேல், 50; இவரது மனைவி சசிகலா, 40; விவசாயி. குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிசை வீடு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகின. ப. வேலூர் எம்.எல்.ஏ., சேகர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.சூதாடிய
6 பேர் கைது
குளித்தலையை அடுத்த, தோகைமலை பஞ்., இடையப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, தோகைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, செம்மேடு ஆறுமுகம் தரிசுக்காட்டில், பணம் வைத்து சூதாடிய கீழவெளியூரை சேர்ந்த ரமேஷ், 35, கார்த்திக், 46, முருகன், 40, தோகைமலையை சேர்ந்த பெரியசாமி, 35, முருகன், 27, கழுகூர் மாணிக்கம், 47, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அருகே
விபத்துகளில் இருவர் படுகாயம்
குளித்தலையை அடுத்த, திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் பழனியாண்டி மனைவி கமலவேணி, 35. கடந்த 6ம் தேதி இரவு, திம்மாச்சிபுரம் பஸ் ஸ்டாப் எதிரே வந்தபோது, கார் மோதியதில் கமலவேணி படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பழனியாண்டி கொடுத்த புகாரின் படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல், குளித்தலையை அடுத்த, வெள்ளப்பட்டி பஞ்., பொன்னிபட்டியைச் சேர்ந்தவர் தங்கவேலு, 65. கூலித்தொழிலாளி. இவர் டி.வி.எஸ்., 50. மொபட்டில் பி.உடையாப்பட்டி நெடுஞ்சாலையில் மைலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த பைக் மோதியது. படுகாயமடைந்த தங்கவேலு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தோகைமலை போலீசார்
விசாரிக்கின்றனர்.