ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று வரை, 24.27 லட்சம் ரூபாய் ரொக்கம், பொருட்களை தேர்தல் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை, புகார்கள் வரப்பெறும் இடங்களில் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை, 23 லட்சத்து, 62 ஆயிரத்து, 340 ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 51,280 ரூபாய் மதிப்பிலான, 73.444 லிட்டர் மதுபானம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், 13,553 ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்த்து, 24 லட்சத்து, 27,173 ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.1.08 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை அதிகாரி மகேந்திரன் தலைமையில் நேற்று சூரம்பட்டி நாலு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னிமலை சாலையில் இருந்து கனி ராவுத்தர் குளம் நோக்கில், ஈரோடு, சென்னிமலை சாலையை சேர்ந்த அருள்ஜோதி , லாரிக்கான வாடகை தொகை, 1 லட்சத்து, 8,530 ரூபாயுடன் பைக்கில் வந்தார். அவரிடம் அத்தொகைக்கான ஆவணங்கள் ஏதுமில்லாததால், பறிமுதல் செய்த தேர்தல் பிரிவு அதிகாரிகள், அத்தொகையை, மாவட்ட கருவூலத்தில் செலுத்தினர்.