டமாஸ்கஸ்: சிரியாவில், பூகம்ப இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட சிறுமி, 17 மணி நேரம் தனது தம்பியை பாதுகாத்து வைத்திருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த உலக சுகாதார அமைப்பு தலைவர் உள்ளிட்டோர் அந்த சிறுமியை பாராட்டி வருகின்றனர்.
16 ஆயிரம் பேர் பலி
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. வீடுகளை இழந்த மக்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால், அந்த பகுதிகளில் கட்டட குவியல்களாக காட்சியளிக்கின்றன. அதற்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆங்காங்கே பிணங்கள் மீட்கப்பட்டு மொத்தமாக எரியூட்டப்படுகிறது.
இந்நிலையில், சிரியாவில் இடிபாடுகளுக்குள் தம்பியுடன் 7 வயதான சிறுமி ஒருவர் சிக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளது. 17 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கி, மீட்பதற்காக காத்திருந்த அந்த சிறுமி, அப்போது தனது தம்பியை பாதுகாப்பதற்காக அவனது தலையில் கையை வைத்து இருந்தார். இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்த வீடியோவை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அத்னோம், இந்த துணிச்சலான பெண்ணுக்கு பாராட்டுகள் எனக்குறிப்பிட்டுள்ளார். ஏராளமானோர் அந்த சிறுமியை பாராட்டி வருகின்றனர்.