கரூர்: கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், தை பட்டத்தில் வெற்றிலை சாகுபடிக்காக, அகத்தி கீரை விதை நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், புகழூர், கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்டாரங்களில் ஆடி, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. ஆடி மாதத்தில் வெற்றிலை சாகுபடி செய்தால், மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், தை பட்டத்தையே விவசாயிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் தற்போது, வெற்றிலை சாகுபடி தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, அகத்தி கீரை விதை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கீரை செடி, இரண்டு மாதங்களில் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, வெற்றிலை கொடியை சிறிய அளவில் வெட்டி, நடவு பணிகள் தொடங்கும்.
இதுகுறித்து, வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது:
ஒரு ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்ய, 10 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. தற்போது, வெள்ளக்கொடி ரக வெற்றிலை சாகுபடி செய்யும் பணிகள் நடக்கிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு, வெற்றிலையை அறுவடை செய்யலாம். பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு நோய் பூச்சி தாக்குதல் இல்லாமல், முறையாக தண்ணீர் பாய்ச்சினால், வெற்றிலை அறுவடை திருப்திகரமாக இருக்கும்.
கடந்த, 2019-20ல் கொரோனா ஊரடங்கு காரணமாக வெற்றிலை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது, நிலைமை ஓரளவுக்கு சீராகி உள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப விசேஷ காலங்களில் வெற்றிலைக்கு அதிக விலை கிடைக்கும். கடலோர மாவட்டங்களில், உள்ள மீனவர்கள் அதிக அளவில் வெற்றிலை பயன்படுத்துவதால், விசேஷம் இல்லாத காலங்களில், அந்த பகுதிகளுக்கு அதிக அளவில், வெற்றிலை அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.