ப.வேலுார்: கடந்த, ஒரு வாரமாக, ப.வேலுார் பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று, தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த இருக்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில்ராஜா, மாடு வளர்த்து வருகிறார். கடந்த, 1ம் தேதி காலையில் மாடுகள் அலறி உள்ளன. வெளியே வந்து பார்த்தபோது, கன்று குட்டி மாயமாகி இருந்ததை கண்டு செந்தில்ராஜா அதிர்ச்சி அடைந்தார். சிறிது துாரத்தில், மாயமான கன்று குட்டி உடல் குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள், சிறுத்தை, கன்று குட்டியை இழுத்து சென்றதை பார்த்ததாக கூறினர்.
அதேபோல், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் வீட்டில் வளர்த்து வரும் நாயின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தபோது, நாயின் கழுத்து குதறப்பட்டிருந்தது. மற்றொரு விவசாயியின் நாயும் மாயமானது. அதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதையடுத்து, சிறுத்தையை பிடிக்க, இருக்கூர் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த, 5ம் தேதி, ப.வேலுார் அருகே ஆட்டுக்குட்டியை இழுத்துக் கொண்டு சிறுத்தை, காட்டுக்குள் ஓடி பதுங்கியது. நாமக்கல், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வனத்துறையினர் தீவிரமாக, சிறுத்தையை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, மீண்டும் இருக்கூர் பகுதிக்கு வந்த சிறுத்தை, விவசாயி கோவிந்தராஜ், 50, என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை இழுத்துச் சென்றது.
சிறுத்தை, 5 கி.மீ., துாரத்தில் உள்ள ப.வேலுார் பகுதிக்கு சென்றுவிட்டதால், நிம்மதி அடைந்திருந்த நிலையில், மீண்டும் இருக்கூரில் முகாமிட்டு, தன் வேட்டையை துவக்கி உள்ளதால், அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டும் சிறுத்தையால், ப.வேலுார் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
ப.வேலுார் அடுத்த ஜேடர்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு, 'சிறுத்தை தன் வீட்டுக்கு வந்துள்ளது' என, ஒரு பெண், போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். 25 பேர் கொண்ட வனத்துறையினர், அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, நாய் கால் தடம் தெரியவந்தது. மேலும், அங்கிருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், நாய் என்பது உறுதியானது. மேலும், 'வாட்ஸ் ஆப்' குழுவில், ப.வேலுார் சிவா தியேட்டர் அருகில், சிறுத்தை இருப்பதாக வதந்தி பரவியதால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
அதேபோல், சிறுத்தை பிடிபடாத நிலையில், பிடிபட்டது என வாட்ஸ் ஆப் குழுவில் பரவி வரும் தகவலால், பொதுமக்கள் குழம்பி உள்ளனர். ப.வேலுார் முழுவதும், தற்போது சிறுத்தை பற்றிய பேச்சு தான் வைரலாகி
வருகிறது.