குமாரபாளையம்:
''குமாரபாளையத்தில் நேற்று நடந்த, விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பிப்.,11ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்,'' என, தாசில்தார் சண்முகவேல் தெரிவித்தார்.
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, பிப்., 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளன. விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று தாசில்தார் சண்முகவேல் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. ஜவுளி உற்பத்தியாளர்கள் இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். கூலிக்கு நெசவு செய்யும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாததால், பிப்., 11ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:
பேச்சுவார்த்தைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் இருவர் மட்டும் வந்திருந்தனர். அடப்பு தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற நிலையில், பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள் வந்தால்தான் தீர்வு காண முடியும். அதனால் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் தகவல் தரப்பட்டு, பிப்., 11ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.ஐ.சி.சி.டி.யூ. விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி சுப்ரமணி கூறியதாவது:
பிப்.,10ல் சேலம் தொழிலாளர் நல அலுவலர் முன்னிலையில் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், பிப்.,11ல் பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.