நாமக்கல்: பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி, சுகாதாக சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடியிருப்பு வாசிகளும், நாள் முழுவதும் மூக்கை பிடித்துக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. அவற்றில், பெரும்பாலான வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், நகராட்சிக்கு உட்பட்ட, 38 வது வார்டு, கணபதி நகர், வேட்டைக்காரன்புதுார் செல்லும் சாலையில், 6 மாதத்துக்கு முன், பாதாள சாக்கடை கட்டும் பணி நிறைவடைந்தது.
அவற்றை சரியாக அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் காரணமாக, பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. அதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் செய்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரம் அடைந்தவர்கள், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இருந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது: பாதாள சாக்கடை திட்டத்தை, ஒப்பந்தம் எடுத்தவர் சரியாக போடவில்லை. மேடு, பள்ளமாக அமைத்ததால், கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கி நிற்கிறது. அதனால், துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் குடியிருக்க முடியாமல், மூக்கை பிடித்துக்கொண்டே செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை. துர்நாற்றத்தின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு விடிவுகாலம் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.