டூவீலர்களுக்காக திறக்கப்பட்ட
உயர்மட்ட பாலம்
குமாரபாளையத்தில் டூவீலர்கள் செல்லும் வகையில் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டது.
குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, அப்பன் பங்களா பகுதியில் கழிவு நீர் பள்ளம் உள்ளது. இதன் மீது தரைமட்ட பாலம் இருந்தது. கோம்பு பள்ளத்தில் கழிவுநீர் அதிகரித்தாலும், மழை வந்தாலும் இந்த பாலத்தின் மீது தண்ணீர் செல்லும். தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, வழி துண்டிக்கப்பட்டு, பல கி.மீ., தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. இவ்வழியே உள்ள தனியார் பள்ளியில் பல்லாயிரம் மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பல கி.மீ. தூரம் சுற்றித்தான் பள்ளிக்கு சென்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. தொடர் மழை வந்ததால் பணி பாதிக்கப்பட்டது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். தற்போது பணி நிறைவு பெற்றதால், டூவீலர்கள் செல்லும் அளவிற்கு பாதை திறக்கப்பட்டது.
வீட்டுமனை பட்டா
கேட்டு பெண்கள் தர்ணா
வீட்டு மனை பட்டா கேட்டு ராசிபுரம் தாசில்தார் ஆபீசில் போராட்டம் நடந்தது.
ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் வீட்டு மனை பட்டா கேட்டு நாமக்கல் கலெக்டரிடம் கடந்த டிசம்பர் மாதம் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ராசிபுரம் தாலுக்கா அலுவலகம் முன் பெண்கள் நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மனு மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
பத்ரகாளியம்மன் கோவில் பண்டிகை
எருமை கிடா வெட்டி நேர்த்தி கடன்
ராசிபுரம் அருகே பத்ரகாளியம்மனுக்கு எருமைகிடா வெட்டி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
ராசிபுரம் அடுத்த மேட்டுகாடு பகுதியில் பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை நடந்த விழாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் அலகு குத்தி ஊர்வலம் வந்தனர். கோவில் அருகே எருமை கிடாவை வெட்டி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக கரகம் மற்றும் அலகு குத்தியவர்கள் அக்னி குண்டத்தில் இறங்கினர். விழாவில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், சீராபள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தீ விபத்தில் குடிசை வீடு சாம்பல்
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே உள்ள கரைப்பாளத்தைச் சேர்ந்தவர் தங்கவேல், 50; இவரது மனைவி சசிகலா, 40; விவசாயி. குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிசை வீடு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகின. ப. வேலுார் எம்.எல்.ஏ., சேகர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தகால் பூஜை
சேந்தமங்கலத்தில் மார்ச், 3ம் தேதி நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, முகூர்த்தகால் ஊன்றப்பட்டு பூஜை நடந்தது.
சேந்தமங்கலத்தை அடுத்த காந்திபுரத்தில் இருந்து நைனாமலைக்கு செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளாக சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விழா, மார்ச், 3ல் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, ஆர்.டி.ஓ., மஞ்சுளா தலைமையில் தாசில்தார் செந்தில்குமார், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் போட்டி நடக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூர்த்த கால் நடப்பட்டு பூஜை நடந்தது. அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். அட்மா குழு துணைத் தலைவர் தனபாலன், டவுன் பஞ்., முன்னாள் தலைவர் பெரியசாமி, வினோத்குமார், கோபி, கவுன்சிலர்கள் விஜயன், ஜெயச்சந்திரன், ஜல்லிகட்டு விழா சங்க நிர்வாகிகள் மனோஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கால்நடை விழிப்புணர்வு முகாம்
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே குமாரசாமிபாளையம் கிராமத்தில் கால்நடை சிகிச்சை, சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், தனவேல், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், 700 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை அளித்தல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. சினை பருவத்தில் உள்ள பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டன.
சவுண்டம்மன் கோவில்
ஆண்டு கும்பாபிேஷக விழா
குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்களால் சவுண்டம்மன் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதன் ஓராண்டு நிறைவு நாளையொட்டி ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு அப்பகுதி பெண்கள்
ஊர்வலமாக சீர் கொண்டுவந்தனர். அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடத்தப்பட்டது.
மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் பலி: விவசாயிகள் அச்சம்
சேந்தமங்கலம் அருகே, கொல்லிமலை அடிவாரம் பெரியபள்ளம்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்குகள் கடித்து, ஆடுகள் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்வதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கொல்லிமலை அடிவாரம், வாழவந்திகோம்பை பஞ்., பகுதிக்கு உட்பட்ட சின்னபள்ளம்பாறை, பெரியபள்ளம்பாறை, வனப் பகுதிகளில் மர்ம விலங்கினங்கள் (செந்நாய், கரடி) இப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள், கோழிகளை வேட்டையாடி வருவதாக புகார் எழுந்துள்ளது. பெரியபள்ளம்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி குப்புசாமி, 42, பல ஆண்டுகளாக ஆடுகள், கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், இவரது 2 ஆடுகள், 4 ஆட்டு குட்டிகள், 3 கோழிகள் ஆகியவற்றை மர்ம விலங்குகள் கடித்து குதறி சென்றுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, மர்ம விலங்குகளை பிடிக்க, மாவட்ட நிர்வாகம், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என கொல்லிமலை அடிவார பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நண்பரின் மனைவியை
தாக்கியவர் கைது
வெண்ணந்துார், பிப். 9-
வெண்ணந்துாரில் நண்பரின் மனைவியை
தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார், பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். அதே பகுதியில் விசைத்தறி ஓட்டும் கூலி தொழிலாளி. கடந்த, 31ம் தேதி வடுகம்பாளையத்தைச் சேர்ந்த தனபால், 31, மற்றும் வெண்ணதுாரை சேர்ந்த மணி ஆகிய இருவரும், கணேசனை அழைத்துக் கொண்டு மல்லசமுத்திரம் அருகே உள்ள தாபா ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டனர். கணேசனுக்கு பில் கொடுக்கவில்லை.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு திரும்பினர். பின்னர், 7 ம் தேதி கணேசனின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவி யோகேஸ்வரிடம்,38, தனபால் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். கணேசன் மனைவி லோகேஸ்வரி, வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் படி, போலீசார், தனபாலை கைது செய்தனர்.
ரூ.41.65 லட்சத்துக்கு
பருத்தி ஏலம்
மல்லசமுத்திரம், பிப். 9---
மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், மொத்தம். 41.65 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மல்லசமுத்திரம் கிளையில் நடந்த ஏலத்துக்கு, மொத்தம், 1,610 மூட்டை பருத்தி கொண்டுவரப்பட்டது.இதில், டி.சி.ஹெச் ரகம் குவிண்டால், 7,370 முதல், 8,369 வரையிலும், பி.டி.,ரகம், 7,510 முதல், 8,539 வரையிலும், கொட்டு பருத்தி, 4,810 முதல், 6,370 வரையிலும் என மொத்தம், 41.65 லட்சத்துக்கு ஏலம் போனது.
குடும்ப பிரச்னை
போலீஸ்காரர்
தற்கொலை
நாமக்கல், பிப். 9-
நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டி சேர்மன் வீதியை சேர்ந்த சங்கர் மகன் இளையராஜா, 37. திருச்செங்கோடு நகர போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய நிலையில், நாமக்கல் ஆயுதப்
படைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, நான்கு மாதமாக, பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதற்கிடையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, தன் வீட்டில் சால்வையால் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நல்லிபாளையம் போலீசார், அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
100 நாள் வேலை
பணி நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எல்லைக்குட்பட்ட கபிலர்மலை யூனியன் கிராமப்புற பகுதிகளில் நடந்து வரும், 100 நாள் வேலை வாய்ப்பு பணி தற்போது நடந்து வந்தது.
நேற்று பணிக்கு வந்த பொதுமக்களை அந்தந்த பகுதி கிராமபஞ்சாயத்து நிர்வாகம் திருப்பி அனுப்பினர். ப.வேலுார் பகுதியில் சிறுத்தை புலி புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் பணி செய்யும் ஊழியர்களின் நலன் கருதி, 100 நாள் வேலை வாய்ப்பு பணி அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை பிடிபடும் வரை பாதுகாப்பு கருதி, 100 நாள் வேலை வாய்ப்பு பணி செய்ய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.