சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், ஸ்ரீ திருப்பாவை பக்த குழு சார்பில், நைனாமலை வரதராஜ பெருமாள் சுவாமிக்கும், ஆண்டாள் கோதாலட்சுமி சுவாமிக்கும் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
காலை, 9:00 மணிக்கு, ஆண்டாள் சன்னதியில் இருந்து திருக்கல்யாண சீர் வரிசையுடன், ஆண்டாள் சூடி கொடுத்த சுடர்மாலை, வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சாத்தப்பட்டு, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 10:00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
விழாவில், வரதராஜ பெருமாள் சுவாமி ராஜ அலங்காரத்திலும், கோதாலட்சுமி சுவாமி ஆண்டாள் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருக்கல்யாண உற்சவத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், காந்திபுரம், முத்துகாபட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து, ஜாஸ்மின் உல்சவ நாட்டியாலயா பள்ளியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளையராஜா, நிர்வாக அலுவலர் சாந்தி, ஸ்ரீ திருப்பாவை பக்த
குழுவினர் செய்திருந்தனர்.