நாமக்கல்: 'நெக்' விலையில் இருந்து குறைத்து முட்டையை கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு, 25 நாளில், 65 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில் உள்ள, 5.50 கோடி கோழிகள் மூலம், தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த முட்டை கொள்முதல் விலையானது, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜன., 1ல், 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, 9ல், 565 காசாக உயர்ந்து, முட்டை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதையடுத்து, 12 நாட்கள் கழித்து, 21ல், 20 காசு குறைக்கப்பட்டு, 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், படிப்படியாக குறைந்து, 31ல், 460 காசாகவும், நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது வரை இதே நிலை நீடிக்கிறது. ஆனால், வியாபாரிகள், 70 காசு வரை குறைத்தே கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: 'நெக்' நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு (நெஸ்பேக்), 40 காசு குறைத்து விற்பனை செய்ய பரிந்துரை செய்கிறது. ஆனால், வியாபாரிகள், 70 காசு குறைத்தே கொள்முதல் செய்கின்றனர். பண்ணைகளில், இரண்டு நாள் உற்பத்தியான, 10 கோடி முட்டை இருப்பு இருப்பது வழக்கம். பண்ணையாளர்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முட்டை விலையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இல்லை என்றால், நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
நெக் விலைக்கு விற்பனை செய்தால் மட்டுமே பண்ணைத்தொழில் காப்பாற்ற முடியும். தினமும், மூன்று கோடி ரூபாய் வீதம், ஜன., 15 முதல், தற்போது வரை, 65 கோடி ரூபாய் பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.