வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கவில்லை என அமெரிக்க துணை அமைச்சர் கரேன் டான்பிரெட் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா மீது அமெரிக்கா பல வித பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்நாட்டிடம் இருந்து சலுகை விலையில், கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஐரோப்பா மற்றும் யூரேஷியாவிற்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் கரேன் டான்பிரெட் கூறியதாவது: இந்தியாவுடனான அமெரிக்க உறவு மிகவும் முக்கியமானது. இந்தியா, அமெரிக்கா இடையே கொள்கை ரீதியிலான அணுகல் வித்தியாசமானதாக இருக்கலாம்.
ஆனால், சர்வதே விதிகள் அடிப்படையில் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. பிராந்திய நிலைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க எரிசக்தி துறை செயலாளர் ஜியோப்ரி பியாட் கூறுகையில், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியாவின் நிலையில் அமெரிக்காவிற்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த விவகாரத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் மதிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.