வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அகர்தலா: திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கையை இன்று(பிப்.,09) பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார்.

திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பா.ஜ., அரசின் பதவிக்காலம் மார்ச் 22ல் முடிவுக்கு வருகிறது. இங்கு 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், 59 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தம், 51 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 36 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
சட்டசபை தேர்தல், வரும் பிப்.,16ல் நடக்கிறது. தேர்தல் முடிவு மார்ச் 2ல் வெளியாகிறது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை பா.ஜ., கடந்த ஜன.,28ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் திரிபுரா தேர்தல் அறிக்கையை பா.ஜ., தேசிய தலைவர் நட்டா இன்று(பிப்.,09) வெளியிட்டார்.
பின்னர் நட்டா பேசியதாவது:
பா.ஜ., வெளியிடும் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம் மட்டும் அல்ல. அது மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகும். திரிபுராவில் முந்தைய காலக்கட்டத்தில் பிரச்னைகள் நிறைந்து காணப்பட்டன. ஆனால் பா.ஜ., ஆட்சியின் போது அமைதியாகவும், வளர்ச்சி அடைந்தும் காணப்பட்டது.
திரிபுராவில் 13 லட்சம் ' ஆயுஷ்மான்' பாரத் ஹெல்த் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.107 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாங்கள் சொல்வதை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
