புதிய பொருட்களை ஆய்வகத்தில் உருவாக்கும்போது, சில வினோதங்கள் நிகழ்வதுண்டு.
அப்படித்தான், அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அண்மையில் ஒரு திரவ உலோகப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
காலியம் மற்றும் இண்டியம் ஆகியவற்றின் கலவையால் உருவான இந்தப் பொருள் இழுவைத்தன்மை கொண்டிருக்கிறது. ஆனால், இதனுள் காற்றோ, வேறு திரவமோ உள்ளே நுழைய முடியாது.
இந்தப் பொருள் வினோதமானது என்று சொல்லக் காரணம் உண்டு. காற்றோ, திரவமோ புகாத ஒரு பொருளை உருவாக்க விரும்பினால், விஞ்ஞானிகள், இறுக்கமும் கடுமையும் கொண்ட ஒரு பொருளைத்தான் உருவாக்குவர்.
அதேபோல, வளைந்து கொடுக்கும், இழுக்கிற இழுப்புக்கு வரும் தன்மையுள்ள ஒரு பொருளை உருவாக்கும்போது, நிச்சயம் அதனுள் காற்றோ, திரவமோ நுழையும் வகையில்தான் இருக்கும்.
ஆனால், வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்தப் பொருள் இரண்டு கட்சியிலும் சேராமல் தனித்து நிற்கிறது.
இந்தப் புதிய பொருள், வளைந்துகொடுக்கும் தன்மையுள்ள மின்கலன்கள் மற்றும் வளைந்துகொடுக்கும் தன்மையுள்ள சர்க்கியூட்டுகளை அச்சிடவும் உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.