உலகின் பெரிய தானோட்டி சரக்கு விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளது 'பைக்கா' என்ற புத்திளம் நிறுவனம். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பைக்கா, ஏற்கனவே பூச்சி மருந்து தெளிக்கும் தானோட்டி குட்டி விமானத்தை இரு ஆண்டுகளுக்கு முன் தயாரித்தது.
இப்போது, 'பெலிக்கன் கார்கோ' என்ற சரக்கு ஏற்றிப் பறக்கும் தானோட்டி விமானத்தை சோதித்து வெற்றிகண்டுள்ளது. லித்தியம் அயனி மின்கலனைக் கொண்ட பெலிக்கன் கார்கோ, ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 320 கி.மீ., தொலைவுக்கு சரக்குகளைச் சுமந்து பறக்கும்.
இரண்டு உந்து விசிறிகளைக் கொண்ட இது, 180 கிலோ வரை பொருட்களை சுமக்கும். புகை மாசினை ஏற்படுத்தாது என்பதால், வருங்கால பசுமை சரக்கு வாகனமாக மாறும் என இதன் வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.