தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 22 % கொள்முதல் செய்ய நிரந்தர அறிவிப்பை வெளியிட, பரிந்துரை செய்ய வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில், பருவம் தவறி பெய்த மழையால், அறுவடைக்கு தயாரான சுமார் 2.30 லட்சம் ஏக்கர் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும், அறுவடை செய்து நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதமும் உயர்ந்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய உணவு கழகத்தின் சென்னை தரக்கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூரு தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், ஒய்.போயா ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
இரண்டாவது நாளாக இன்று காலை திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த நிலையில், மதியம் தஞ்சாவூர் மாவட்டம் அருள்மொழிபேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வந்திருந்த நெல்லை ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்து சென்றனர்.
மேலும், விவசாயிகளிடம் அறுவடை செய்த நாள், நெல் ரகம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்துக்கொண்டனர். இதே போல, பொய்யுண்டார்கோட்டை, பாப்பாநாடு, அலிவலம், பில்லங்குழியில் உள்ள கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, மத்தியக்குழுவினரிடம் விவசாயிகளான ஜீவக்குமார், செந்தில்குமார் ஆகியோர்; விவசாயிகள் உழைத்து உற்பத்தி செய்த நெல்லை வேண்டும் என்றே யாரும் ஈரமாக்குவதில்லை. எனவே, மத்திய அரசு நெல்லின் ஈரப்பதத்தை 22 % ஆக கொள்முதல் செய்ய நிரந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள் பரிந்துரைக்க வேண்டும்.
பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மழையால் நெல் சாய்ந்து பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், புதிய நெல் ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆய்வின் போது, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.