வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் :இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோர், 'விசா' பெறுவதற்கு காத்திருக்கும் காலம் அதிகமாக இருப்பதை குறைப்பதற்காக, அமெரிக்க அதிபருக்கு ஆலோசனை குழுவினர் பல பரிந்துரைகளை அளித்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின், அமெரிக்காவுக்கு செல்வதற்காக விசா கேட்டு காத்திருக்கும் காலம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து மாணவர் விசா, வர்த்தக விசா, சுற்றுலா விசா பெறுவதற்கு, 400 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. சில குறிப்பிட்ட பிரிவுகளில், மூன்றாண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.
![]()
|
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, ஆலோசனைக் குழு பல பரிந்துரைகளை அளித்துள்ளது. சிலிக்கான் வேலியைச் சேர்ந்த இந்தியாவை பூர்வீகமாக உடைய அஜய் ஜெயின் பதுாரியா உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு கூறியுள்ள முக்கிய பரிந்துரைகள்:
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில், விசா கேட்டு காத்திருக்கும் காலம் அதிகமாக உள்ளது.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நேர்க்காணலை நேரிடையாக நடத்தாமல், 'ஆன்லைன்' வாயிலாக நடத்தலாம். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் வாயிலாக இந்த நேர்க்காணலை நடத்தலாம்.
இந்தியாவுக்கு கூடுதல் விசா ஊழியர்களை அனுப்பி வைத்து, விண்ணப்பங்கள் பரிசீலனையை வேகப்படுத்த வேண்டும். காத்திருப்பு காலத்தை அதிகபட்சம், 24 வாரங்களாக குறைக்க வேண்டும்.
காத்திருப்பு காலத்தை குறைப்பது தொடர்பாக பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அது பிறகு கைவிடப்பட்டது. இந்த நடவடிக்கைகளை மீண்டும் துவக்க வேண்டும்.இவ்வாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தப் பரிந்துரைகளை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் செயல்படுத்தத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.