தமிழக முதல்வர் ஸ்டாலின்: பள்ளிக் கல்வி முடித்த அரசுப் பள்ளி மாணவியர், கல்லுாரி செல்லாமல் நின்று விடக் கூடாது என்பதற்காக, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் பெயரால், உயர்கல்வி உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தில், 1.16 லட்சம் மாணவியர் பயன் அடைந்துள்ளனர்; இதற்காக கடந்த ஐந்து மாதங்களில், 69.44 கோடி ரூபாய், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: இதே, மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் பெயரால தான், ஏழை பெண்களுக்கு, தாலிக்கு தலா, 8 கிராம் தங்கமும், 25 முதல், 50ஆயிரம் ரூபாய் வரை திருமண நிதியுதவியையும் ஜெயலலிதா வழங்கிட்டு இருந்தாங்க... அதுக்கு மூடுவிழா நடத்திட்டு தான், இந்த திட்டத்தை செய்றீங்க... இதுல பெருமை வேற அடிச்சுக்கணுமா என்ற, 'டவுட்' எழுதே!
lll
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட, 1 அடி அதிக உயரத்தில், கருணாநிதி பேனா சிலையை கடலில் வைக்க, தி.மு.க., ஏன் விரும்புகிறது என்பதை விளக்குவதில், கனிமொழி அக்கறை காட்டுவாரா?
டவுட் தனபாலு: திருவள்ளுவரும், கருணாநிதியும் ஒன்றா என்ன... அவர், 2,000 வருஷத்துக்கு முன்னாடி பொழுது போகாம, 1,330 குறள்களை எழுதி வச்சார், அவ்வளவு தான்... ஆனா, கருணாநிதி வாழையடி வாழையா எத்தனை வாரிசுகளை வளர்த்து வச்சிருக்கார்... அதுக்கு அவங்க, 'டவுட்' இல்லாம, பேனா சிலை வச்சு நன்றிக்கடன் செய்றாங்க!
lll
தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி: 'இலவச வேட்டி, சேலை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 90 சதவீத இலவச வேட்டி, சேலைகள் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. இந்தாண்டு மிகத் தரமானதாக, 25 'டிசைன்'களில் வேட்டி, சேலையை தயாரித்துள்ளோம்; அதனால் தான், தாமதம் ஏற்பட்டது என்பதை உணர வேண்டும்.
டவுட் தனபாலு: 'டிசைன் டிசைனா தயாரிச்சு தாங்க'ன்னு உங்களிடம் யார் கேட்டாங்க... கிராமத்து மக்கள் இந்த வேட்டி, சேலைகளை உடுத்திட்டு, 'பேஷன் ஷோ'க்களுக்கா போகப் போறாங்க... உங்க நிர்வாக தவறுகளை மறைக்க, டிசைன் டிசைனா பொய் சொல்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
lll