அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்றுள்ள, விக்டோரியா கவுரிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, 'கவுரி அரசியல் பின்னணி உடையவர். நீதிபதியாக அவர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை வழக்கறிஞர்கள் சிலர் வாதிட்டனர்.
ஆனால், உச்ச நீதிமன்றமோ, 'அரசியல்பின்னணி உடையவர்களும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, ஏற்கனவே பதவி வகித்துள்ளனர்' என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. அதற்கு உதாரணமாக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்வி.ஆர்.கிருஷ்ணன், நீதிபதியாக பதவியேற்கும் முன், கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்ததுடன், தேர்தலிலும் போட்டியிட்டார். கேரளாவில் நம்பூதிபாட் அரசில் அமைச்சராக அங்கம் வகித்தார் என்று, தெரிவித்துள்ளது.
அதேபோல, அசாமில் காங்கிரஸ் முதல்வராக இருந்த, கேசவ் சந்திர கோகாய் மகன் ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். நம் தமிழகத்தைச் சேர்ந்த, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு போன்றவர்களும், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் கொள்கைகளில் வாழ்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
'நீதியரசர்களும் சாதாரண மனிதர்கள் தான்; இவர்களும் சில நேரங்களில் ஜாதி, மதம், அரசியல், பணத்திற்கு வளைந்து சென்று விடுகின்றனர்' என்று, புகார் கூறப்படுகிறது. இப்படி நீதியரசர்கள் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுவதற்கு, அவர்களின் நியமனத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருந்து வருவதே காரணம்.
நீதிமன்றங்களில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், சாமானியர்கள் நீதிமன்றங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் எனில், நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர், ஒரு சதவீதம் கூட, எதற்காகவும் வளைந்து கொடுக்காதவர்களாக இருக்க வேண்டும்.
சில மேலை நாடுகளில், நீதிபதிகளை தேர்வு செய்யும் போது, அவர்களை மட்டும் அல்ல... அவர்களது குடும்ப உறவுகள் பின்னணியையும் தீர விசாரித்த பிறகே, நீதிபதிகளாக பணி நியமனம் செய்கின்றனர்; அது, நம் நாட்டில் சாத்தியம் இல்லை.
அதனால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை போட்டி தேர்வு நடத்தி தேர்ந்தெடுப்பதை போல, உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், இந்திய நீதித்துறை சேவைகள் வாயிலாக தேர்வுகள் நடத்தி, தேர்வு செய்ய வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில், ஒரு சதவீதம் கூட, ஜாதி, மதம், அரசியல் கலப்பு இருக்கக் கூடாது. இந்த மாற்றங்களைச் செய்தால், நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைவதோடு, நீதித்துறை மீதான களங்கமும் துடைக்கப்படும்.
ll
குட்டிக்கரணம் போட்டாலும் நடக்காது!
என்.ஏ.நாகசுந்தரம்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'அ.தி.மு.க.,வை அழிக்க, பா.ஜ., கட்சி துடிக்கிறது' என, பேட்டி
அளித்துள்ளார், தி.மு.க.,வைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்
மனோ தங்கராஜ்.
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை,
அ.தி.மு.க.,வை எந்த வழியிலும் வெற்றி கொள்ள முடியாமல், பல ஆண்டுகள்
வனவாசத்தில் இருந்தனர், கழகத்தினர்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததும்,
அ.தி.மு.க., வில் உள்ள முக்கிய புள்ளிகளை இழுத்து, தங்கள் கட்சியில்
சேர்த்துக் கொண்டதுடன், அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவியும் தந்து அழகு
பார்த்துள்ளனர்.
இதிலிருந்தே, அ.தி.மு.க.,வை அழிக்க, கங்கணம் கட்டி
செயல்பட்டு வருவது, எந்தக் கட்சி என்பதை மக்கள் நன்கு அறிவர். 'பா.ஜ.,
கட்சி வீழ்த்த நினைப்பது, தி.மு.க.,வையே' என, அந்தக் கட்சியின் தமிழக
தலைவர் அண்ணாமலை உட்பட, பல தலைவர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.
இப்படி,
பா.ஜ., தங்களை தொடர்ந்து குறிவைப்பதை சகிக்க முடியாத தி.மு.க.,வினர்,
'அ.தி.மு.க.,வை, பா.ஜ., அழிக்கப் பார்க்கிறது' என்ற, அப்பட்டமான பொய்யை
கூறியுள்ளனர்.
உண்மையில், பிரிந்துஉள்ள அ.தி.மு.க., தலைவர்கள்
ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அதன் வாயிலாக, அந்தக்கட்சியுடன் கூட்டணி
அமைத்து, லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற வேண்டும்என்பதே, பா.ஜ.,
தலைவர்களின் விருப்பம்.
அதேநேரத்தில், தமிழகத்தில் பா.ஜ.,வின்
வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாத தி.மு.க.,வினர் தான், அந்தக்
கட்சிக்கும், அ.தி.மு.க.,விற்கும் இடையே சிண்டு முடியும் வேலையில்
ஈடுபட்டுள்ளனர். இவர்கள் என்ன தான் சிண்டு முடிந்தாலும், குட்டிக்கரணம்
போட்டாலும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் பிளவு ஏற்படுத்த
முடியாது;அதற்கான முயற்சி, விழலுக்கு இறைத்த நீராகவே அமையும்.
lll
மகாலட்சுமியாகவே காட்சி அளிப்பார்!
ந.தேவதாஸ்,
சென்னையிலிருந்து எழுதுகிறார்: பார்லிமென்டில், இம்மாதம் முதல் தேதி,
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில், மாதச்
சம்பளதாரர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த, வருமான வரிச்சலுகை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, ௭ லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன்,
பெண்களுக்கான புதிய திட்டங்கள், ராணுவம், ரயில்வேக்கு கூடுதல் நிதி
ஒதுக்கீடு என, வளர்ச்சியைஇலக்காக வைத்து, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். நான் பணிபுரிந்த காலத்தில், வருமான வரி விலக்கு வரம்பு, 2 லட்சம் ரூபாயாக இருந்தது.
அப்போது,
தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும், 'வாலன்ட்டர் பிராவிடன்ட் பண்ட்' என்று
சொல்லக்கூடிய, வி.பி.எப்., திட்டத்தில் ஓரளவு பணத்தை செலுத்தி, அடுத்த
மாதமே அதை எடுத்துக் கொள்ளும் வசதி இருந்தது; இதன் வாயிலாக, பல
தொழிலாளர்கள் வருமான வரிச்சலுகை பெற்றனர்.
அந்த தருணத்தில், மத்திய நிதியமைச்சராக இருந்தவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ப.சிதம்பரம்.
மத்திய
அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும்,
கிள்ளிக்கொடுப்பதற்கே மிகவும் கஷ்டப்படுவார்; ஆற்றில் போட்டாலும் அளந்து
போடக்கூடிய தயாளர்.
ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை
வழங்கக்கூடிய பஞ்சப்படியை, 'அவசியம் தானா?' என்று கேட்ட மகா புண்ணியவான்.
அவர், தற்போதைய பட்ஜெட்டை குறை கூறுகிறார்; அப்படி குறை கூற, எந்த
அருகதையும் அவருக்கு கிடையாது.
வரும் நிதியாண்டிற்கான மத்திய
பட்ஜெட், வரலாற்று சிறப்பு மிக்கது என்பதே, பல பொருளாதார வல்லுனர்களின்
கருத்து. குறிப்பாக, மாதச் சம்பளதாரர்களுக்கு மத்தியநிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன், மகாலட்சுமியாகவே காட்சி அளிப்பார் என்பதே நிதர்சனமான உண்மை.
lll
l