மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், 60 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலையம் அமைக்கவுள்ளது.
பகிங்ஹாம் கால்வாய் அருகில், தேசிய நெடுஞ்சாலை - திருக்கழுக்குன்றம் சாலை இடையே, 1992ல் இடம் தேர்வு செய்யப்பட்டும், நிர்வாக சீர்கேடுகளால், கட்டுமானம் துவக்கப்படாமல், 30 ஆண்டுகளாக இழுபறி ஏற்பட்டது.
மத்திய பொதுப்பணித் துறை மூலம் பேருந்து நிலையம் அமைக்க, குழுமம் ஒப்பந்தம் செய்து, 18 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, 2020ல் இறுதி செய்தது.
தனியார் நிறுவனத்திடம், கட்டுமான ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. பேருந்து நிலைய அமைவிடம், தாழ்வாக உள்ளதால், நிலமட்டத்தை உயர்த்த, மண் நிரப்ப முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக, மண்ணின் தன்மை அறிய, பரிசோதனை நடத்தப்பட்டது. நிர்வாக சிக்கல், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த ஆண்டு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், சி.எம்.டி.ஏ., நிர்வாகத்தினருடன், ஆய்வு செய்து, பேருந்து நிலையத்தை, 60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அதன்பின், 10 மாதங்கள் கடந்தும், கட்டுமானப் பணிகள் துவக்கப்படாதது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
திட்டத்தை, பொது தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் செயல்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை நிறுவனம், பேருந்து நிலைய அமைவிட பகுதியில் மண்ணின் தன்மை குறித்து, தற்போது பரிசோதித்து வருகிறது.