கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி, 82 சதவீதமளவுக்கு நிறைவு பெற்றிருப்பதால், இன்னும் மூன்று மாதங்களில் மொத்த நிலமும் எடுக்கப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\\
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்குமான பிரதான விமான நிலையமாக, கோவை விமான நிலையம் உள்ளது. மாநில அளவில் சென்னைக்கு அடுத்ததாக, அதிகளவு விமானங்களையும், பயணிகளையும் கையாளும் இரண்டாவது பெரிய விமான நிலையமாகவும் உள்ளது.
உள்நாட்டுக்குள் 22 விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டாலும், இரண்டே இரண்டு வெளிநாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதால், பெயரளவிலேயே சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது.கொங்கு மண்டலத்தின் தொழில் வளத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை, 20 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. 2010ல் தி.மு.க., ஆட்சியின்போது, இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின், அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் வேலை நடந்தது. நிதியும் ஒதுக்கப்படவே இல்லை.
ரூ.1132 கோடி நிதி
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பே, இதற்காக ரூ.1132 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.நிலம் கையகப்படுத்தும் பணியும் வேகப்படுத்தப்பட்டது. மொத்தம் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதில், 461.90 ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலமாகும்.இதைத் தவிர்த்து, 134.32 ஏக்கர், மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமானது. அரசு புறம்போக்கு நிலம் 28.37 ஏக்கரும், பூமிதான நிலம் மற்றும் அரசு உபரி நிலமும் சேர்த்து 3.30 ஏக்கரும் இதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த மாதம் வரையிலும், 82 சதவீத தனியார் பட்டா நிலங்கள், அதாவது 385 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் பிற துறையின் நிலங்களை நில உபயோக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான நிலத்தில், விரிவாக்கப்பணிகளை மேற்கொள்வதற்கு, அந்தத் துறையின் சார்பில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இழப்பீடு அதிகம் கோருவது, உரிமையாளர்கள் தெரியாதது என 30 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலங்களின் உரிமையாளர்களை கண்டு கொள்ளாத முடியாத சூழ்நிலையிலும், இழப்பீடுக்கு ஒப்புக் கொள்ளாத நிலையிலும், அவற்றுக்கான இழப்பீட்டை கோர்ட்டில் செலுத்தி விட்டு, பணிகளைத் துவங்க முடியும்.
இதற்கிடையில், விமான நிலைய விரிவாக்க நிலமெடுப்புப்பணிக்கான டி.ஆர்.ஓ., மாற்றப்பட்டார். ஸ்டாம்ப்ஸ் டி.ஆர்.ஓ.,விடம் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் இந்த பணி மேலும் தாமதமாகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
'இனி தாமதமாகாது'
திட்டமிட்டபடி, பணிகள் நடப்பதால், நிலமெடுப்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிதியாண்டுக்குள், நிலம் கையகப்படுத்தும் பணியை முடிப்பதற்கு வருவாய்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர். விமான நிலைய விரிவாக்கம் நிலமெடுப்புப் பணி (பொறுப்பு) டி.ஆர்.ஓ., செல்வசுரபியிடம் கேட்டதற்கு, ''இன்னும் இரண்டு மாதங்களில் அல்லது அதிகபட்சமாக மூன்று மாதங்களில் இந்தப் பணி நிறைவு பெறும். இனி தாமதமாக வாய்ப்பில்லை,'' என்றார்.
நிலமெடுப்புப் பணி முடிவடையவுள்ளதால், விமான நிலைய விரிவாக்கப்பணி எப்போது துவங்குமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தனியார் விமான நிலையம்?
கோவை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. தமிழக அரசு நிதியில் நிலமெடுத்துக் கொடுத்த பின், தனியாரிடம் கொடுப்பதற்குப் பதிலாக, நகருக்கு வெளியே இன்னும் இரண்டு மடங்கு நிலத்தை தனியாரே வாங்கி, புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. நமது சிறப்பு நிருபர் -