வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்றுள்ள, விக்டோரியா கவுரிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, 'கவுரி அரசியல் பின்னணி உடையவர். நீதிபதியாக அவர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை வழக்கறிஞர்கள் சிலர் வாதிட்டனர்.
![]()
|
ஆனால், உச்ச நீதிமன்றமோ, 'அரசியல்பின்னணி உடையவர்களும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, ஏற்கனவே பதவி வகித்துள்ளனர்' என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. அதற்கு உதாரணமாக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்வி.ஆர்.கிருஷ்ணன், நீதிபதியாக பதவியேற்கும் முன், கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்ததுடன், தேர்தலிலும் போட்டியிட்டார். கேரளாவில் நம்பூதிபாட் அரசில் அமைச்சராக அங்கம் வகித்தார் என்று, தெரிவித்துள்ளது.
அதேபோல, அசாமில் காங்கிரஸ் முதல்வராக இருந்த, கேசவ் சந்திர கோகாய் மகன் ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். நம் தமிழகத்தைச் சேர்ந்த, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு போன்றவர்களும், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் கொள்கைகளில் வாழ்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
'நீதியரசர்களும் சாதாரண மனிதர்கள் தான்; இவர்களும் சில நேரங்களில் ஜாதி, மதம், அரசியல், பணத்திற்கு வளைந்து சென்று விடுகின்றனர்' என்று, புகார் கூறப்படுகிறது. இப்படி நீதியரசர்கள் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுவதற்கு, அவர்களின் நியமனத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருந்து வருவதே காரணம்.
நீதிமன்றங்களில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், சாமானியர்கள் நீதிமன்றங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் எனில், நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர், ஒரு சதவீதம் கூட, எதற்காகவும் வளைந்து கொடுக்காதவர்களாக இருக்க வேண்டும்.
![]()
|
சில மேலை நாடுகளில், நீதிபதிகளை தேர்வு செய்யும் போது, அவர்களை மட்டும் அல்ல... அவர்களது குடும்ப உறவுகள் பின்னணியையும் தீர விசாரித்த பிறகே, நீதிபதிகளாக பணி நியமனம் செய்கின்றனர்; அது, நம் நாட்டில் சாத்தியம் இல்லை.
அதனால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை போட்டி தேர்வு நடத்தி தேர்ந்தெடுப்பதை போல, உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், இந்திய நீதித்துறை சேவைகள் வாயிலாக தேர்வுகள் நடத்தி, தேர்வு செய்ய வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில், ஒரு சதவீதம் கூட, ஜாதி, மதம், அரசியல் கலப்பு இருக்கக் கூடாது. இந்த மாற்றங்களைச் செய்தால், நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைவதோடு, நீதித்துறை மீதான களங்கமும் துடைக்கப்படும்.