மூணாறு : மூணாறு ஊராட்சியில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி நிர்வாகத்திற்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நோட்டீஸ் அளித்தது.
இந்த ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் 21 வார்டுகளில் காங்கிரஸ் 11, இடதுசாரி ஜனநாயக கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஊராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.
காங்கிரஸ் கட்சிச் சேர்ந்த 11ம் வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், 18ம் வார்டு உறுப்பினர் பிரவீணா ஆகியோர் இடது சாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டில் இணைந்ததால் 2021 டிசம்பரில் காங்கிரஸ் நிர்வாகம் கவிழ்ந்தது. தற்போது ஊராட்சியில் பிரவீணா தலைவர், ராஜேந்திரன் துணை தலைவராக உள்ளனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த 8ம் வார்டு உறுப்பினர் தங்கமுடி 2022 செப்டம்பரில் காங்கிரசில் இணைந்ததால் ஊராட்சியில் காங்கிரஸ் பலம் 10 ஆக உயர்ந்தது.
நோட்டீஸ்: இந்நிலையில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி நிர்வாகத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முதல் வார்டு காங்கிரஸ் உறுப்பினர் தினகரன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த பத்து உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் தேவிகுளம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரி டோம்ஜோசப்பிடம் வழங்கப்பட்டது.
பிப்.25க்கு முன்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என டோம் ஜோசப் தெரிவித்தார்.